மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி ஏராளமான உழவர்கள் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் போராட்டம் நடத்திவருகின்றனர். கொட்டும் பனியிலும், கடும் குளிரையும் பாராமல் உழவர்கள் போராடிவருகின்றனர். இன்றுடன் (டிச. 07) அவர்களது போராட்டம் 12ஆவது நாளை எட்டியுள்ளது.
விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு ஐந்து சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டவில்லை. இதனிடையே, ஏற்கனவே அறிவித்தபடி நாளை (டிச. 08) விவசாய சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பிற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் வருகின்ற 9ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்துப் பேச இருக்கிறார். இந்தச் சந்திப்பின்போது உழவர்களின் பிரச்சினை முக்கிய இடம் வகிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், "விரைவில் நிலைமை தீர்க்கப்படாவிட்டால் நாடு முழுவதும் உள்ள உழவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள்" என எச்சரித்தார்.
இதையும் படிங்க: புதிய கட்டடம் கட்டுவதற்கு உள்ள பணம் உழவர்களுக்கு மட்டும் இல்லையா?