அகமதாபாத் (குஜராத்): குஜராத்தின் 182 சட்டசபை தொகுதிகளில் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ந்தேதி தேர்தல் நடந்து முடிந்தது. மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு 2-வது கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்று முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
அகமதாபாத், வதோதரா, காந்திநகர் என 14 மாவட்டங்களை சேர்ந்த இந்த தொகுதிகளில் பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள், காங்கிரஸ் முன்னணி தலைவர்கள், ஆம் ஆத்மி நிர்வாகிகள் என முக்கிய கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்த நிலையில் 3ம் தேதி மாலையுடன் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது.
இந்த தொகுதிகளில் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட 61 கட்சிகளின் வேட்பாளர்கள், 285 சுயேச்சை வேட்பாளர்கள் என 833 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 93 தொகுதிகளிலும் பா.ஜனதா மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளன. காங்கிரஸ் கட்சி 90 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தி உள்ளன.
பிற கட்சிகளில் முக்கியமாக பாரதிய பழங்குடியினர் கட்சி 12 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 44 தொகுதிகளிலும் களம் காண்கின்றன. ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியும் கணிசமான இடங்களில் போட்டியிடுகிறது. அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள காட்லோடியா தொகுதியில் முதலமைச்சர் பூபேந்திர படேல் போட்டியிடுகிறார்.
படேல் இன தலைவர் ஹர்திக் படேல், விரம்கம் தொகுதியிலும், அல்பேஷ் தகோர், காந்திநகர் தெற்கு தொகுதியிலும், தலித் பிரிவு தலைவர் ஜிக்னேஷ் மேவானி, வட்காம் தொகுதியிலும், எதிர்க்கட்சித்தலைவர் சுக்ராம் ரத்வா, ஜெட்பூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். வதோரா மாவட்டத்தில் உள்ள வகோடியா தொகுதியில் பாஜக கிளர்ச்சியாளர் ஸ்ரீவத்சவ் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
இந்த இரண்டாம் கட்ட தேர்தலில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்களிப்பார்கள். அகமதாபாத் நகரில் ராணிப் பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் பிரதமர் மோடி வாக்களிப்பார் என்று மாவட்ட ஆட்சியாளர் தவால் படேல் தெரிவித்துள்ளார். நாரன்புரா பகுதி வாக்குச் சாவடியில் அமித்ஷா வாக்களிப்பார் என்று என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், முன்னாள் துணை முதல்வர் நிதின் படேல், மத்திய அமைச்சர் தேவுசின் சவுகான், பாஜக எம்பி பாரத் சிங் தாபி ஆகியோரும் இன்றைய தேர்தலில் வாக்களிக்கின்றனர். டிச.1ந் தேதி நடைபெற்ற முதல் கட்ட வாக்குபதிவில் 63.31 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இரண்டாம் கட்ட தேர்தலில் 1.29 கோடி ஆண் வாக்காளர்கள், 1.22 கோடி பெண் வாக்காளர்கள் உட்பட மொத்தம் 2.51 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இரண்டாம் கட்ட தேர்தலில் 5.96 லட்சம் இளம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இரண்டாம் கட்ட தேர்தலை அமைதியாக நடத்தி முடிப்பதற்காக போலீசாருடன் துணை ராணுவமும் களமிறக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தேர்தல் முடிவுகள் டிச.8ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: பீகாரில் பெண் கொடூரக்கொலை... மார்பகங்கள் துண்டிப்பு...