புதுடெல்லி: பிலிகுண்டுலுவில் உள்ள காவிரியில் இருந்து 24,000 கனஅடி வீதம் காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவில் 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் மாற்றியமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு (36.76 டிஎம்சி) தண்ணீர் திறப்பதை உறுதி செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு தமிழ்நாடு அரசு அந்த மனுவில் தெரிவித்துள்ளது.
காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரனை செய்ய கோரி தமிழ்நாடு அரசு தரப்பில் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் முன்பு முறையீடு செய்யப்பட்டது. தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி மற்றும் அரசு வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி ஆகியோர் இந்த முறையீட்டினை முன் வைத்தனர்.
தமிழ்நாடு அரசு தரப்பில் இந்த வழக்கு மிகவும் அவசர வழக்கு என்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு முன்னதாக நீதிபதி கான்வில்கர் அமர்வில் விசாரிக்கப்பட்டது அவரது ஓய்வுக்கு பின் அமர்வு அமைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறும்போது : இன்றைய தினமே புதிய அமர்வு அமைக்கப்படும் அந்த அமர்வு இந்த விவகாரத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து முடிவெடுக்கும் என தெரிவித்தார்.
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,
- மேகதாது அணை அமைக்க அனுமதி வழங்குவது தான் காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வுவாக அமையும்.
- மேகதாது அணை அமைக்கும் பட்சத்தில் கூடுதல் தண்ணீரை சேமித்து வைத்து தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் போது தண்ணீரை வழங்க முடியும்.
- தற்போதைய ஆண்டில் மழைப்பொழிவு குறைவு, நீர் வரத்து குறைவு உள்ளிட்டவற்றையெல்லாம் உத்தரவு பிறப்பிக்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- தற்போது கூட தண்ணீர் திறக்கப்படுகிறது இன்று கூட 12000 கன அடி தண்ணீர் பிலிகுண்டுலுவில் இருந்து திறந்து விடப்பட்டுள்ளது என கர்நாடக அரசு தாக்கல் செய்த இடையீட்டு மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சர்வே செய்வதால் மட்டும் அணை கட்டிவிட முடியாது - அமைச்சர் துரைமுருகன்