டெல்லி: தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரணை செய்தனர்.
கர்நாடக அரசு தரப்பில், போதிய மழை இல்லாத காரணத்தினால் தண்ணீர் இல்லாத சூழல் உள்ளது. குறிப்பாக மழையின் அளவு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 42% குறைவு என்பதால் நீர் பற்றாக்குறை உள்ளது. மேலும் எங்கள் தரப்பு சிரமங்களை எடுத்துரைக்க காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் முயற்சி செய்யும் போது அதை கேட்காமல் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வெளிநடப்பு செய்கின்றனர்.
தமிழ்நாடு அரசு தரப்பில், காவிரி நீர் மேலாண்மை வாரியம் 10000 கன அடி வீதம் தண்ணீரை திறந்து விட உத்தரவிட்டும் அதனை கர்நாடக அரசு எற்க மறுத்து தண்ணீர் திறந்து விடாமல் உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் தண்ணீர் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து நீதிபதிகள், இரண்டு மாநிலங்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இந்த விவகாரத்ததை ஏன் எடுத்து செல்லக்கூடாது என கேள்வி எழுப்பினர். தமிழ்நாடு அரசு தரப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தப்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதை தவிர தங்களிடம் வேறு வழி இல்லை என் தெரிவிக்கப்பட்டது.
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பதி கூறும்போது, அடுத்து வரும் நாட்களில் காவிரியில் இருந்து தண்ணீர் தமிழ்நாட்டிற்கு திறப்பது குறித்து வரும் திங்கட்கிழமை கூட்டம் நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நளினியின் பாஸ்போர்ட் விண்ணப்பம் - 4 வாரங்களில் முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு!
இதனையடுத்து நீதிபதிகள், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் தான் நிபுணர்கள் இருக்கிறார்கள். நாங்கள் நிபுணர்கள் இல்லை, எனவே, எதையும் விசாரிக்காமல் உடனடியாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்து அடுத்த 15 நாட்களுக்கு தேவையான தண்ணீர் குறித்து கூட்டம் குறித்தும் விபரங்களையும், தற்போது வரை ஆணையத்தின் உத்தரவு படி கர்நாடக அரசு நீர் திறந்து விட்டுள்ளதா என்பது தொடர்பாக ஆய்வு செய்து வெள்ளிக்கிழமைக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.
மேலும் தற்போது நிலையை கருத்தில் கொண்டு குறைந்து நீர் திறந்து விட உத்தரவிட கோரிய கர்நாடக அரசின் கோரிக்கையையும் மற்றும் நீர் பற்றாக்குறையை போக்க தண்ணீரை திறந்து விட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் இடைக்கால மனு குறித்து வரும் திங்கட்கிழமைக்குள் கூட்டி காவிரி மேலாண்மை ஆணையம் முடிவு எடுக்கவும் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!