ஶ்ரீஹரிகோட்டா: குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக இஸ்ரோ பிரத்யேகமான உருவாக்கிய எஸ்எஸ்எல்வி (SSLV-D1)ராக்கெட், இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் 144 கிலோ எடை கொண்ட புவி கண்காணிப்புக்கான EOS-02 செயற்கைக்கோளையும், அரசுப் பள்ளி மாணவிகள் சேர்ந்து உருவாக்கிய 8 கிலோ எடை கொண்ட ஆசாதிசாட் (AzaadiSAT)என்ற செயற்கைக்கோளையும் சுமந்து சென்றது.
ஆனால், எஸ்எஸ்எல்வி ராக்கெட்டில் டேட்டா லாஸ் ஏற்பட்டதால் செயற்கைக்கோள்களின் நிலை குறித்து அறிய முடிவில்லை என்றும், ட்ரேஸ் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்தது. இந்த நிலையில், இரண்டு செயற்கைக்கோள்களும் சரியான சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படவில்லை என்றும், அதனால் அவற்றைப் பயன்படுத்த இயலாது என்றும் இஸ்ரோ தலைவர் சோமநாத் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "இஸ்ரோ உருவாக்கிய அதிநவீன எஸ்எஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால், ராக்கெட் இரு செயற்கைக்கோள்களையும் 356 கிலோ மீட்டர் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்துவதற்கு பதிலாக, 76 கிலோ மீட்டர் நீள்வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது. சென்சார் செயலிழப்பால் செயற்கைக்கோள்கள் ராக்கெட்டிலிருந்து முன்கூட்டியே வெளியேறியதால் வட்டப்பாதை மாறியுள்ளது.
இதனால் இந்த இரு செயற்கைக்கோள்களையும் பயன்படுத்த முடியாது. மேலும் இந்த செயல்முறையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டு வருகிறது, அவற்றை மேம்படுத்தி SSLV-D2 திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். SSLV-D2 முழுமையாக வெற்றியடையும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று கூறினார்.