மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து கடந்த டிசம்பர் 30ஆம் தேதி உத்ரகாண்ட் மாநிலம், ரூர்க்கி அருகே சாலையோர தடுப்பில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த ரிஷப் பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதற்கட்ட சிகிச்சைகள் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்ட நிலையில், அவர் மும்பை மருத்துவமனைக்கு கடந்த புதன்கிழமை மாற்றப்பட்டார். தொடர்ந்து மும்பை மருத்துவமனையில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கால் மூட்டு பகுதியில் ஏற்பட்ட தசை நார் காயத்தை குணப்படுத்த ரிஷப் பந்த்க்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.
ஏறத்தாழ 3 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற்றதாக கூறப்படும் நிலையில், பந்தின் உடல் நிலை குறித்த தகவல்களை மருத்துவார்கள் வெளியிட மறுத்துவிட்டனர். மேலும் பல்வேறு சிகிச்சைகள் ரிஷப் பந்திற்கு மேற்கொள்ள வேண்டி உள்ளதாகவும், அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதேநேரம் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அவர் உடல் நிலை தேறி வருவதாகவும், அடுத்த சில மாதங்கள் முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் ரிஷப் பந்த் விளையாட மாட்டார் என்பது ஏறக்குறைய உறுதியானது.
இதையும் படிங்க: பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.. சிறுவன் கூறிய காரணம் என்ன?