கம்மம்: தெலங்கானா மாநிலம், புத்தராம் பகுதியைச்சேர்ந்த ஜமால் சாஹேப்(48) என்பவர், நேற்று(செப்.19) ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் வசிக்கும் தனது மகள் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் ஜமாலிடம் லிஃப்ட் கேட்டுள்ளனர்.
தங்கள் வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்துவிட்டதால் உதவி செய்யுமாறு இருவரும் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனை நம்பிய ஜமால் அவர்களில் ஒருவரை தனது பின் இருக்கையில் ஏற்றிக்கொண்டுள்ளார். சிறிது தூரம் செல்வதற்குள், பின் இருக்கையில் மாஸ்க் அணிந்தவாறு இருந்த நபர் ஜமால் மீது ஊசி ஒன்றை செலுத்தியுள்ளார்.
கடுமையான வலியை உணர்ந்த ஜமால், வண்டியை நிறுத்தியபோது, அந்த நபர் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி, அவ்வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் ஏறி சென்றுவிட்டார். சில விநாடிகளில் ஜமால் மயங்கி கீழே விழுந்துவிட்டார்.
அதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு குளுக்கோஸ் செலுத்தப்பட்டது. இருந்தபோதிலும் ஜமால் இறந்துவிட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கம்மம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். ஜமாலுக்கு எந்த மருந்து செலுத்தப்பட்டது என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஜமால் கீழே விழுந்த இடத்தில் ஊசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அது தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்படவுள்ளது. ஊசி செலுத்திய நபர் மற்றொரு வாகனத்தில் சென்றுள்ளார். அதனால் இருவரும் திட்டமிட்டு செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. ஜமாலுடன் தனிப்பட்ட முன்விரோதம் கொண்ட யாரேனும் இந்தச்செயலில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று கூறினார்.
இதையும் படிங்க: அயோத்தியில், ஒற்றுமை சிலையை விட உயரமாக அமையவுள்ள ராமர் சிலை