இமாச்சலப் பிரதேச மாநிலம், கின்னௌரில் ஆகஸ்ட் 11ஆம் தேதி பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நிலச்சரிவில் அரசுப்பேருந்து, சரக்கு வாகனம் உள்ளிட்டவை சிக்கின.
கடந்த இரு நாள்களாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், இதுவரை 16 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அதில் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர்.
மீட்புப்பணியில் மாநில பேரிடர் மீட்புக்குழுவுடன், இந்தோ-திபெத் காவல் படை, தேசியப் பேரிடர் மீட்புக்குழுவும் ஈடுபட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் முடக்கப்பட்டிருந்த சாலைப் போக்குவரத்து சீர்செய்யப்பட்டு மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டது.
மீட்புப்பணிகளை நேரில் ஆய்வு செய்த இமாச்சலப்பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர், மலையில் தொடர்ந்து கற்கள் விழுந்துவருவதால் மீட்புப்பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தாண்டு பருவமழை தொடங்கிய பின்னர் இமாச்சலில் 30-க்கும் மேற்பட்ட நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை