பீகார்: டெல்லியில் கடந்த 28ஆம் தேதி இரவு 16 வயது சிறுமி ஒருவர் பொதுவெளியில் படுகொலை செய்யப்பட்டார். பலரின் முன்னிலையில் தெருவில் வைத்து சிறுமி சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். சுமார் 20 முறை கத்தியால் குத்தியதோடு இல்லாமல் தலையில் கல்லைப் போட்டும் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் சிறுமியின் காதலனான ஷாகில்(20) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த சூழலில், இருவரும் சண்டையிட்டு பிரிந்திருந்ததாகவும், காதலை ஏற்க மறுத்த ஆத்திரத்தில் சிறுமியை கொன்றதாகவும் ஷாகில் தெரிவித்தார்.
இந்த நிலையில், டெல்லி சிறுமி கொலை சம்பவம் போலவே பீகாரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பீகாரின் சீதாமரி மாவட்டத்தில் உள்ள ஹரிபேலா கிராமத்தைச் சேர்ந்த சந்தன் குமார் என்ற இளைஞர், மைனர் சிறுமி ஒருவரை ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அவர்களது வீட்டிலும் தெரிவித்துள்ளனர்.
அண்மையில், சிறுமி சந்தனுடனான காதலை முறித்துக் கொண்டுள்ளார். அதேபோல், திருமணம் செய்யவும் முடியாது என தெரிவித்துள்ளார். இதனால், நேற்று(மே.30) சந்தன் தனது முன்னாள் காதலியை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி செய்துள்ளார். அந்த இளைஞர் சிறுமியை 12 முறை கத்தியால் குத்தியதாக தெரிகிறது. அதன் பிறகு சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.
அந்த வழியாக சென்ற அரசியல் பிரமுகர் ஒருவர் சிறுமி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சிறுமியை மீட்டு சீதாமரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அதில், சந்தன் சிறுமியை தாக்கிய பிறகு குடும்பத்துடன் வீட்டை காலி செய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் சந்தனை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு, பிறகு பெற்றோர் மற்றும் உறவினர்கள் பேச்சைக் கேட்டு தன்னை பிரிந்ததாகவும், அதன் காரணமாகவே கொலை செய்ய முடிவு செய்ததாகவும் சந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிறுமியின் அண்டை வீட்டாரிடம் கேட்டபோது, சந்தன் ஆறு மாதங்களுக்கு முன்பு சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகவும், அதன் காரணமாக சிறுமியின் பெற்றோர் சந்தனுடனான திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் குறிப்பிட்டனர்.
இதையும் படிங்க: பள்ளி மாணவி கத்தியால் குத்தி கொடூர கொலை.. தலைமறைவு இளைஞர் கைது!