டெல்லி : ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் நிறுவனத் தலைவரும் பிகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் வெள்ளிக்கிழமை (நவ.19) ஈடிவி பாரத்துக்கு பிரத்யேக நேர்காணல் அளித்தார்.
அப்போது, “விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினரின் தொடர் அழுத்தம் காரணமாக விவசாய சட்டங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன” என்றார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு (2022) நடக்கிறது. இந்த நிலையில் விவசாய சட்டங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன.
இது பாஜகவுக்கு ஒருபோதும் பலன் அளிக்காது. விவசாய போராட்டத்தின்போது விவசாயிகள் பலர் உயிரிழந்துள்ளனர், சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்களை மத்திய அரசு பாகிஸ்தானியர்கள், காலிஸ்தானியர்கள் என்று அவமதித்தது. இறுதியாக விவசாயிகளை ஒடுக்க நினைத்தார், அதுவும் நடக்கவில்லை. ஆகையால் வேறு வழியின்றி விவசாய சட்டங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. இதனை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்” என்றார்.
முன்னதாக இன்று (நவ.19) காலை 9 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது விவசாய சட்டங்கள் திரும்ப பெறப்படுவதாக அவர் அறிவித்தார். அந்த உரையின்போது, “நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும், நாட்டின் விவசாயிகளுக்காகவும்தான் வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
இதைச் சரியாக புரிய வைக்க முடியவில்லை. நாட்டின் கனவுகளை நினைவாக்கும் வகையில் எனது கடின உழைப்பு தொடரும். நான் இன்னமும் கடினமாக உழைப்பேன்” என்று உங்களிடம் உறுதி அளிக்கிறேன்” என்றார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : பிகார் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பதிவுச் செய்வோம்- லாலு பிரசாத் யாதவ்!