புதுச்சேரி: அரியாங்குப்பம் ஆர்.கே நகர் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் (36), இவரது நண்பர் ரமேஷ் (35). இவர்கள் இருவரும் மாத வாடகைக்கு கார்களை எடுத்து, அதனை தமிழ்நாட்டில் அடமானம் வைத்து மோசடி செய்து தலைமறைவாகியுள்ளனர்.
இது தொடர்பாக கார் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் இருவர் மீதும் கிருமாம்பாக்கம், அரியாங்குப்பம், கோரிமேடு காவல் நிலையங்களில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களைத் தேடி வந்தனர்.
16 வாடகை கார்கள்
விசாரணையில், ரமேஷ் கடலுார் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது அடையாள அட்டையை கார் உரிமையாளர்களிடம் காண்பித்து கரோனா சேவைக்கு என்று கூறி அவர்களை நம்ப வைத்து, இதுவரை 16 கார்களை வாடகைக்கு வாங்கி, அதனை அடமானம் வைத்து, தலைமறைவானது தெரியவந்தது.
கைது
இந்நிலையில், கடலுாரில் பதுங்கி இருந்த தினேஷை காவல்துறையினர் நேற்று (ஆக.4) கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் அடமானம் வைத்திருந்த ஆறு கார்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கார்களின் மதிப்பு 45 லட்சம் ரூபாய் ஆகும்.
இதையடுத்து தினேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ரமேஷை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த காவல்துறையினரை தெற்கு எஸ்.பி. லோகேஷ்வரன் வெகுவாகப் பாராட்டினார்.
இதையும் படிங்க: நடிகர் தனுஷ் சொகுசு கார் வழக்கு - நீதிபதி சரமாரி கேள்வி