ஸ்ரீநகர்: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை பயணம் வரும் 30ஆம் தேதி ஸ்ரீநகரில் முடிவடைகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்ட ராகுல் காந்தி, கடைசியாக பஞ்சாபில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஜம்மு காஷ்மீர் சென்றார்.
தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி, வரும் 30ஆம் தேதி ஸ்ரீநகரில் தேசியக் கொடி ஏற்றிவைத்து இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறைவுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளார். பதற்றம் நிறைந்த பகுதியான காஷ்மீரில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க ராகுல் காந்திக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் உள்ள சுர்சுவில் ராகுல் காந்தியின் யாத்திரை தொடங்கிய நிலையில், அவரது சகோதரியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் மெஹபூபா முப்தி, அவரது மகள் இல்திஜா முப்தி, முப்தி முகமதி சயீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
யாத்திரையின் இடையே ஜம்மு காஷ்மீர், புல்வாமாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு நிகழ்ந்த கார் வெடிகுண்டு தாக்குதலில், கொல்லப்பட்ட 40 சிஆர்பிஎப் வீரர்கள் நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அணிவகுப்பு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
வரும் 30ஆம் தேதி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவு பெற உள்ள நிலையில், அடுத்த இரு நாட்களில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு முக்கியத் தலைவர்கள் உள்ளிட்டோர் யாத்திரையில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 30ஆம் தேதி ஸ்ரீநகரில் நடக்கும் மெகா கூட்டத்தில் தேசிய கொடியை ஏற்றி வைக்கும் ராகுல்காந்தி தொடர்ந்து மக்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.
இதையும் படிங்க: மருத்துமனையில் தீ விபத்து - மருத்துவ தம்பதி உள்பட 5 பேர் பலி!