கவுகாத்தி : கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடைபயணம் மேற்கொண்டார். தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா வழியாக காஷ்மீர் சென்ற ராகுல் காந்தியின் சுற்றுப்பயணம் காங்கிரஸ் கட்சிக்கு தென் மாநிலங்களில் வலு சேர்த்தது.
அதன் விளைவாக தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில், இரண்டாவது கட்டமாக பாரத் நியாய யாத்திரா என்ற பெயரில் ஜனவரி 14ஆம் தேதி (இன்று) தொடங்கி மார்ச் 20ஆம் தேதிவரை நடைபயணம் மேற்கொள்ள ராகுல் காந்தி திட்டமிட்டு உள்ளார்.
மணிப்பூரில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை இன்று தொடங்க உள்ளது. இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஹட்டா கங்ஜெய்புங்கில் இருந்து யாத்திரையை தொடங்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு இருந்தது. ஆனால், சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை சுட்டிக்காட்டி அங்கிருந்து யாத்திரையை தொடங்க அம்மாநில அரசு அனுமதி மறுத்தது.
இதையடுத்து, தவுபல் மாவட்டம் கோங்ஜோமில் உள்ள தனியார் இடத்தில் இருந்து யாத்திரை தொடங்கும் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது. அதன்படி, தவுபல் மாவட்டம் கோங்ஜோமில் இருந்து யாத்திரை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. யாத்திரை தொடங்கும் இடத்தை நோக்கி ராகுல் காந்தி விரைந்து கொண்டு இருக்கிறார். இந்த யாத்திரையை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடங்கி வைக்க உள்ளார்.
மணிப்பூரில் இருந்து தொடக்க யாத்திரை நேரடியாக அசாம் மாநிலத்தின் வழியாக சென்று ஜனவரி 18ஆம் தேதி சிவசாகர் பகுதியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அசாமில் 833 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி 8 நாட்களில் 17 மாவட்டங்களை சென்றடைய உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
இதில் சிவசாகர் பகுதியில் உள்ள அம்குரி மற்றும் ஜோர்ஹத் மாவட்டத்தில் உள்ள கிப்பன் வனப் பகுதியை ஒட்டிய மரியனி பகுதியில் இரண்டு பொதுக் கூட்டங்களில் ராகுல் காந்தி கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அங்கிருந்து புறப்படும் ராகுல் காந்தி ஜோர்ஹத், பிரமபுத்ரா நதி வழியாக செல்லும் நகரங்களுக்கு நடைபயணம் மேற்கொள்கிறார்.
தொடர்ந்து, தேமாஜி மாவட்டத்தில் தங்கும் ராகுல் காந்தி, ஜனவரி 20ஆம் தேதி லகிம்பூர் டவுன் வழியாக லாலுக், ஹர்மதி, நவபோசிய உள்ளிட்ட பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு இறுதியில் அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ள இடா நகரில் இரவு தங்கி தனது பயணத்தை தொடருகிறார்.
தொடர்ந்து மார்ச் மாதம் இறுதியில் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தனது பயணத்தை ராகுல் காந்தி நிறைவு செய்ய உள்ளார். இந்த பாரத் ஜோடோ நியாய யாத்திரை எதிர்வரும் மக்களவை தேர்தல் ஆதாயத்திற்கான நடைபயணம் அல்ல என்றும் கருத்தியலை முன்னிறுத்தும் வகையில் நடைபெறுகிறது என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க : மகாராஷ்டிர அரசியல் திடீர் திருப்பம்! காங்கிரசின் நம்பிக்கையை உடைத்த மிலிண்ட் தியோரா!