புதுச்சேரி மின்துறையை தனியார் மயக்கமாக்குவதை கண்டித்து மின்துறை ஊழியர்கள் கடந்த நான்கு நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஒரு சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்றும் (அக் 1) மின்துறை ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்ததால் புதுச்சேரி மாநிலம் முழுவதும் திடீரென்று மின்தடை ஏற்பட்டது. இதனால் புதுச்சேரியின் கிராமங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை இருளில் மூழ்கின.
அதைத்தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் ஆங்காங்கே சாலைகளில் அமர்ந்து கைகளில் மெழுகுவர்த்தியை ஏந்திய நிலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் காரணமாக பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதன்பின் படிப்படியாக மின் தடை சரி செய்யபட்டது. இதற்கிடையே நேற்றிரவு அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில், புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலர், டிஜிபி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் மின்துறை அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் நமச்சிவாயம், “புதுச்சேரியில் தற்போது உள்ள நிலைமையைச் சமாளிக்க மத்திய அரசு பவர் கிரிட் நிறுவனத்திலிருந்து 24 ஊழியர்கள் புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளனர். மின் நிலையங்களுக்கு பாதுகாப்பளிக்க இரண்டு துணை ராணுவ கம்பெனி படையினரும் புதுச்சேரிக்கு வருகை தர உள்ளனர்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தனியார் மயமான மின்துறை - புதுச்சேரி ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்