புதுச்சேரியில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள், இரண்டாம் கட்ட தலைவர்கள் என பலர் பாஜகவில் ஐக்கியமாகி வருகின்றனர்.
இதற்கிடையே காங்கிரஸ்சில் அமைச்சர் பதவி கேட்டு மறுக்கப்பட்டு அதிருப்தியில் இருந்த புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார் கடந்த மாதம் புதுச்சேரி வந்த பாஜக மேலிட பார்வையாளர் நிர்மல் குமார் சூரானாவை ரகசியமாக சந்தித்து பேசினார். இதனால் அப்போது காங்கிரஸ் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது
காங்கிரஸ் கட்சியில் முதலமைச்சர் வேட்பாளராக தன்னை அறிவிக்காததால் கடந்த நான்கரை ஆண்டுகளாக அதிருப்தியில் இருந்த அமைச்சர் நமச்சிவாயத்தின் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி கடந்த ஆண்டு பறிக்கப்பட்டது, கட்சியில் இருந்த நமச்சிவாயத்தின் ஆதரவாளர்களும் ஓரங்கட்டபட்டனர்.
இந்த நிலையில் அமைச்சர் நமச்சிவாயம் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பாஜக மேலிடத் தலைவர்களை ரகசியமாக சந்தித்து வந்தார். காங்கிரஸ் நடத்திய மூன்று நாட்கள் போராட்டத்தில் ஒரு மணி நேரம் மட்டுமே பங்கேற்று புறக்கணித்து வெளியேறினர். அவருடன் அவரது ஆதரவாளர்களும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை, இச்சம்பவம் அரசியல் நோக்கர்களிடையே கவனிக்கத்தக்கதாக பேசப்பட்டது.
இந்த நிலையில் வரும் 29,30ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா புதுச்சேரிக்கு வருகிறார் என்றும் அப்போது அமைச்சர் நமச்சிவாயம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆதரவாளர்களுடன் நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல்வேறு கட்சிகளில் இருந்தும் முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் இணைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்கள் சந்திப்பு