புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்ற விதியின் கீழ் இன்று காலை 9.30 மணிக்கு கூடுவதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக காலை 9 மணிக்கு வந்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினர் அங்காளன் ஆகியோர் தங்களது தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை அதிகாரிகள் புறக்கணிப்பதாக கூறி சட்டப்பேரவை வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
சுமார் 20 நிமிடத்திற்கு மேல் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்த நிலையில், சட்டப்பேரவைக்கு வந்த சபாநாயகர் செல்வம் இருவரையும் தனது அறைக்கு அழைத்துச் சென்று சமாதானப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து காலை 9.37 மணிக்கு சபை தொடங்கியது. சபாநாயகர் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது எதிர்கட்சியினர் ஒட்டுமொத்தமாக எழுந்து சட்டம் ஒழுங்கு உள்பட மக்கள் பிரச்னைகளை பேச வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அவையில் சில நிமிடங்கள் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து எதிர்கட்சிகள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு நடப்பு செய்தனர்.
இதையும் படிங்க: ‘பாஜகவை குறை கூறுவதற்கு திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை’ - வானதி சீனிவாசன் ஆவேசம்!
அதே வேளையில் அவையில் சந்திராயன் 3, ஆதித்யா விண்கலங்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய பிரதமர் மோடிக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து புதுச்சேரியில் மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிய மத்திய அரசு, பிரதமர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சில சட்ட முன்வரைவுகள் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பிறகு தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் செல்வம் அவை நடவடிக்கைகளை காலை 10 மணிக்கு ஒத்திவைத்தார். ஒட்டுமொத்தமாக இன்றைய சபை நடவடிக்கை 23 நிமிடங்கள் மட்டுமே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மெட்ரோ ரயில்: சென்னையில் வேகம் எடுக்கும் சுரங்கம் தோண்டும் பணிகள்!