டெல்லி: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. இது குறித்து மல்யுத்த வீராங்கனைகள் போலீசில் புகார் அளித்தனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து பிரிஜ் பூஷன் சரண் சிங்கை நீக்கக் கோரியும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதல் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வினேஷ் போகாட், சாக்சி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஏராளாமனா மல்யுத்த வீரர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர், உத்தரபிரதேச - ஹரியானா மாநில விவசாய சங்கத்தினர் என பலரும் மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அதேநேரம் டெல்லி போலீசார் தங்களது போராட்டத்தை ஒடுக்க தொடர்ந்து முயற்சித்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் குற்றம் சாட்டினர்.
இதனிடையே கடந்த 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடம் நோக்கி பேரணி சென்று, மகளிர் மகாபஞ்சாயத்து நடத்தப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர். அதன்படி, புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி மல்யுத்த வீரர்கள் பேரணி செல்ல முயற்சித்தனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.
வீராங்கனைகளை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றும், குண்டுகட்டாக தூக்கிச் சென்றும் கைது செய்தனர். டெல்லி போலீசார் வீரர்களை இழுத்துச் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. டெல்லி போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- — Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) May 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) May 30, 2023
">— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) May 30, 2023
சாகும்வரை உண்ணாவிரதம்:
இந்த நிலையில், பாஜக எம்பி பிரிஜ் பூஷன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்தும், டெல்லி போலீசாரின் நடவடிக்கையை கண்டித்தும், சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர்.
இது குறித்து மல்யுத்த வீரர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "மே 28ஆம் தேதி நடந்ததை அனைவரும் பார்த்திருப்பீர்கள். போலீசார் எங்களை கைது செய்ததையும், எங்களை நடத்திய விதத்தையும் பார்த்திருப்பீர்கள். போலீசார் ஜந்தர் மந்தரில் நாங்கள் போராட்டம் நடத்திய இடத்தில் இருந்த எங்களது உடமைகளை அப்புறப்படுத்திவிட்டனர். எங்கள் மீது எப்ஐஆரும் பதிவு செய்துள்ளனர்.
நீதி கேட்டு போராடிய நாங்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுகிறோம். இந்த நாட்டில் எங்களுக்காக எதுவும் இல்லை என்று உணர்கிறோம். நாட்டிற்காக ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்ற தருணங்களை நினைக்கும்போது, ஏன் அவற்றை வென்றோம்? என்று தோன்றுகிறது. நாங்கள் வாங்கிய பதக்கங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை. அதனால் அவற்றைத் திருப்பித் தர முடிவு செய்தோம்.
பதக்கங்களை குடியரசுத் தலைவரிடம் திருப்பித் தரலாம் என நினைத்தோம். ஆனால், அவர் நாங்கள் போராட்டம் நடத்திய இடத்திற்கு இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தும், எங்கள் பிரச்சினைக்கு எதுவும் கூறவில்லை. எங்களை மகள்கள் என்று அழைக்கும் பிரதமரும், நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டதிலிருந்து இதுவரை ஒரு முறை கூட எங்கள் பிரச்சினையை கேட்கவில்லை. மாறாக, நாங்கள் எதிர்க்கும் பிரிஜ் பூஷன் நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்கு அழைத்தனர்.
அதனால், கங்கா தசரா கொண்டாடப்படும் இன்று எங்களது பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போகிறோம். எங்களது உயிராகவும், ஆன்மாகவும் இருந்த பதக்கங்களை கங்கை நதியில் வீசிய பிறகு, இந்தியா கேட் பகுதிக்கு சென்று சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.