டெல்லி : புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பை முன்னிட்டு 75 ரூபாய் சிறப்பு நாணயம் மட்டும் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் 970 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நாடாளுமன்ற கட்டடம் இன்று திறக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார்.
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்தார். அவருடன் மத்திய அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் வந்தனர். நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கான சிறப்பு பூஜையில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, தமிழகத்தில் இருந்து வந்திருந்த ஆதினங்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். பூஜையை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து சென்ற ஆதீனங்கள், பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்கினர்.
பிரதமர் மோடி, செங்கோலின் முன் நெடுஞ்சாண்கிடையாக 30 நொடிகளுக்கு மேல் விழுந்து வணங்கினார் . ஆதீனங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்று, செங்கோலை நாடாளுமன்ற மக்களவையின் சபாநாயகர் இருக்கை அருகே நிறுவினார். தொடர்ந்து புதிய நாடளுமன்ற திறப்பை நினைவு கூறும் வகையில் 75 ரூபாய் நாணயம் மற்றும் சிறப்பு தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.
75 ரூபாய் நாணயத்தின் ஒருபுறம் அசோக சின்னமும், அதன் நடுவில் பாரத் என்ற வார்த்தை தேவநாகரி எழுத்திலும், இந்தியா என்ற வார்த்தை ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டு உள்ளது. அசோக சின்னத்தின் அடியில் ரூபாயின் மதிப்பான 75 என்ற எண் பொறிக்கப்பட்டு இருந்தது. இந்த 75 ரூபாய் நாணயத்தின் மறுபுறத்தில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் படம் அச்சிடப்பட்டு இருந்தது.
நாணயத்தின் மேல் பகுதியில் தேவநாகரி எழுத்தில் சன்சாத் சங்குல் என்றும், நாணயத்தின் கீழ் சுற்றளவில் நாடாளுமன்ற வளாகம் என்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. நாணயம் வெளியிடப்பட்ட 2023 ஆண்டு, பாராளுமன்ற வளாகத்தின் படத்திற்கு கீழே சர்வதேச எண்ணில் எழுதப்பட்டுள்ளது.
இந்த நாணயத்தின் எடை 34 புள்ளி 65 முதல் 35 புள்ளி 35 கிராம் வரை இருக்கும் என மத்திய பொருளாதார விவகாரத்துறை தெரிவித்து உள்ளது. மேலும் 44 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட இந்த 75 ரூபாய் நாணயம் 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் செம்பு, 5 சதவீதம் நிக்கல் மற்றும் 5 சதவீதம் துத்தநாகம் ஆகிய உலோகங்களை கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
இதையும் படிங்க : புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்த பிரதமர்.. சபாநாயகர் இருக்கை அருகே தமிழ்நாட்டின் 'செங்கோல்'