மத்தியப் பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தில் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரும் பழங்குடியினத்தை சேர்ந்த பெண் ஒருவர், அப்பகுதியில் வசிக்கும் ஆண் நண்பருடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையறிந்து ஆத்திரமடைந்த கணவரின் உறவினர்கள், அப்பெண்ணைக் கட்டையால் தாக்கியதோடு மட்டுமின்றி, கணவரின் சகோதரனைத் தோளில் சுமந்தபடியே நடந்து செல்ல வேண்டும் எனத் தண்டனை வழங்கினர். அப்பெண் கஷ்டப்பட்டு நடக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வெளியானது. அவருக்குப் பின்னால் நடந்து வரும் நபர்கள், குச்சியால் தாக்கி நடக்கும்படி துன்புறுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, வீடியோ தொடர்பாகக் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கூற்றுப்படி, "கணவரிடமிருந்து பரஸ்பர ஒப்புதல் பெற்றுத் தான் மற்றொரு நபருடன் சேர்ந்து வாழ்கிறேன். என் கணவர் வெளியே சென்ற சமயத்தில், முன்னாள் கணவரின் உறவினர்கள் இத்தகைய அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், முதற்கட்டமாக வீடியோவிலிருந்த நான்கு பேரைக் கைது செய்தனர். கணவரைப் பிரிந்த பெண், வேறு ஒரு நபருடன் வாழத் தொடங்கினால், இத்தகைய தண்டனை கலாச்சாரம் அப்பகுதிகளில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மனைவியைக் கொலை செய்த கணவன் காவல் நிலையத்தில் சரண்!