சேலம் ஜங்ஷன் பகுதியில் உள்ள சற்குரு ஸ்ரீ அப்பா பைத்திய சுவாமியின் பிறந்த நாள் பூஜை மற்றும் அன்னமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் குடும்பத்துடன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார் .
கடந்த சில தினங்களாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பதிவேடுகளை இந்தியில் எழுத சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் புதுச்சேரி மாநிலத்தில் திமுக,பாமக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இந்தி திணிப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஜிப்மர் மருத்துவமனையில் தமிழ் மொழிக்கு முதலிடம் என்று கூறி இந்தி திணிப்பு விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதனிடையே சேலத்தில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அளித்த பேட்டியில்,”ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி திணிப்பு விவகாரத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் முழுமையாக விளக்கமளித்த நிலையில் திமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்துவது அரசியல் விளம்பரத்திற்கானது.அரசியல் உள்நோக்கத்துடன் அரசியல் கட்சிகள் நடத்திவரும் போராட்டம் தேவையற்றது” என்று கூறினார்.