திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பூயப்பள்ளியில் நேற்று மாலை 4.20 மணி அளவில், ஆறு வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். இவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
முதலாம் வகுப்பு படித்து வந்த சிறுமி, தன் 8 வயது சகோதரருடன் நேற்று மாலை டியூஷனுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது காரில் வந்த சில மர்ம நபர்கள், சிறுமியை கடத்த முயன்றுள்ளனர். இதனை சிறுவன் தடுக்க முயன்றபோது, கடத்தல்காரர்கள் அவரை தள்ளிவிட்டு குழந்தையைக் கடத்திச் சென்றுள்ளனர்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் மற்றும் சகோதரரிடம் போலீசார் இன்று நடத்திய விசாரணையில், சிறுமி திட்டமிட்டு கடத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் கடத்தல் சம்பவம் நடந்தபோது உடன் இருந்த சிறுமியின் 8 வயது சகோதரர் கொடுத்த வாக்குமூலத்தின்படி, டியூசனுக்குச் சென்று கொண்டிருந்தபோது ஒரு பெண் உள்பட நான்கு பேர் கொண்ட கும்பல் வெள்ளை நிறக் காரில் சிறுமியை கடத்திச் சென்றது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: கரூரில் தன்னுடன் பேச மறுத்த நண்பனை கத்தியால் தாக்கிய மாணவர் கைது!
இதையடுத்து கடத்தல்காரர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த அழைப்பில் முதலில் ரூ.5 லட்சம் பணம் கேட்டதாகவும், அதன் பின்னர் இரட்டிப்பாக்கி ரூ.10 லட்சம் பணத்தை கேட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், குழந்தை பத்திரமாக இருப்பதாகத் தெரிவித்த கடத்தல்காரர்கள், பணத்தைக் கொடுத்தால் குழந்தையைப் பத்திரமாக செவ்வாய்கிழமை காலை ஒப்படைப்பதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில், திருவனந்தபுரம் கொல்லம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்ட எல்லைப் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், இன்று காலை திருவனந்தபுரத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
இதற்கிடையில், குழந்தை காணாமல் போனது குறித்து தகவல் தெரிந்தவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 112, 9946923282 அல்லது 9495578999 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த கும்பலில் ஒருவரின் ஓவியத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
கடத்தப்பட்ட குழந்தை குறித்த பதற்றம் அதிகரித்ததையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்துமாறு மாநில காவல்துறைக்கு முதல்வர் பினராயி விஜயன் நேற்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் போதை ஊசி போட்டுக் கொண்ட மாணவர் உயிரிழப்பு..! நடந்தது என்ன?