கான்கேர்: சத்தீஷ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டம் ராய் கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயதான மான்கி பர்ச்சாபி என்ற கர்ப்பிணி. இவர் மதுபோதையில் தனது கணவரை கோடாரியால் அடித்துக் கொலை செய்ததாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மான்கி தனது வீட்டில் வைத்து கணவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி அவரின் கணவர் உயிரிழந்ததாகவும், இந்த சம்பவம் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற நிலையில் உடலை தகனம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததாகவும் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இறந்தவரின் உடல் நேற்று (ஜூலை 21) உடற்கூராய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியானது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஐந்து குழந்தைகள் உள்ள நிலையில் மான்கி ஆறாவது குழந்தையுடன் கர்ப்பமாக இருந்துள்ளார் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: மணிப்பூரைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் அரங்கேறிய கொடூரம்!
கடந்த ஜூலை 16ஆம் தேதி மாலை 5 மணியளவில் மான்கியின் கணவர் சாகரம் பரசாபி (35) வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது மான்கி வீட்டிற்குள் மதுபோதையில் கிடந்துள்ளார். இதை பார்த்த அவரின் கணவர் சாகரம் பரசாபி, மான்கியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் இடையே தகராறு முற்றிப்போகவே, ஆத்திரமடைந்த மான்கி அருகே இருந்த கோடாரியை எடுத்து கணவரின் தலையில் அடித்துள்ளார். இதில், மயக்கமடைந்த கணவர் சாகரம் பரசாபியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் மாட்டிக்கொள்வோம் என பயந்துபோன மான்கி வீட்டில் வைத்தே அவருக்கு சிகிச்சை வழங்க திட்டமிட்டுள்ளார்.
இதற்காக உள்ளூர் இயற்கை மருத்துவரான பைகா குனியா என்பவரை தொடர்பு கொண்ட அவர், சிகிச்சை வழங்கும் வழிமுறைகளை கேட்டு வீட்டில் வைத்தே கணவருக்கு சிகிச்சை வழங்கியுள்ளார். ஆனால், பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடி வந்த சாகரம் பரசாபி கடந்த 19ஆம் தேதி வீட்டில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து தனது கணவரை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை மான்கி மேற்கொண்டுள்ளார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், மான்கியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையில் கணவரை கர்ப்பிணி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பதவி உயர்வில் இடஒதுக்கீடு - சமூகநீதிக்கு துணை நிற்போம் என உச்சநீதிமன்றம் உறுதி