கொச்சி: பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் பயணமாக நாளை(ஏப்.24) கேரள மாநிலம் செல்கிறார். நாளை கொச்சியில் இளைஞர்கள் கலந்து கொள்ளும் "யுவம்-23" என்ற நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். பின்னர் வரும் 25ஆம் தேதி, திருவனந்தபுரத்தில், கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார். அதோடு, பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். கொச்சி வாட்டர் மெட்ரோ திட்டத்தையும் தொடங்கி வைக்க இருக்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு கேரளாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில், கேரளா வரும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து பாஜக அலுவலகத்திற்கு கடிதம் வந்ததாகத் தெரிகிறது. அதில், பிரதமரின் வருகையின்போது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்போவதாக குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கேரள பாஜக தலைவர் கே.சுரேந்திரன் நேற்று(ஏப்.22) போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொச்சி காவல் ஆணையர் சேதுராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, "கைது செய்யப்பட்ட நபர் கொச்சியைச் சேர்ந்த சேவியர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்தச் செயலை செய்துள்ளார். தனது அண்டை வீட்டாரை சிக்க வைப்பதற்காக மிரட்டல் கடிதம் எழுதியதாகத் தெரியவந்துள்ளது.
கொச்சிக்கு வரும் பிரதமருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2,060 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்புக்காக, பிற்பகல் 2 மணி முதல் போக்குவரத்து கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. யுவம்-23 நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் செல்போன்களை மட்டுமே எடுத்து வர முடியும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: PM Modi : ரத்தாகிறதா பிரதமர் மோடியின் கேரளா பயணம்? உளவுத் துறை கூறுவது என்ன?