கர்நாடகா: இரண்டு நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி தென்மாநிலங்களுக்கு வந்து உள்ளார். நேற்று (ஏப்.8) தெலங்கானா மாநிலம் ஐதராபாத் வந்த பிரதமர் மோடி செகந்திராபாத் - திருப்பதி இடையிலான வந்தே பாரத் ரயில் திட்டத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு நிறைவு பெற்ற பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம், சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட பணிகளை துவக்கி வைத்தார். அங்கிருந்து நேற்றிரவு பிரதமர் மோடி கர்நாடகா சென்றார். சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளில் பிரதமர் பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு செல்கிறார்.
கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பந்திப்பூர் புலிகள் காப்பகம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து சாலை மார்க்கமாக முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வருகிறார். அங்கு வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு, அவற்றுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்து, யானைகளுக்கு உணவும் வழங்குகிறார்.
தொடர்ந்து யானை பாகன்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி, ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பாகன் பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து உரையாடுகிறார். அதன்பின்னர், கார்மூலமாக தெப்பக்காட்டிலிருந்து மசினகுடி சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக மீண்டும் மைசூர் செல்கிறார்.
பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் பதவிட்டு உள்ளது. இதனிடையே புலி, சிங்கம் உள்ளிட்ட 7 பூனை இனங்களின் சட்டவிரோத கடத்தல்களை தடுக்கும் வகையில் சர்வதேச அளவிலான கூட்டமைப்பை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்.
ஐபிசிஏ என அழைக்கப்படும் இந்த அமைப்பு புலி, சிங்கம், சிறுத்தை, பனிச் சிறுத்தை, பூமா, ஜாகுவார் மற்றும் சீட்டா ஆகிய ஏழு பெரிய பூனை இனங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பை உறுதி செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே பிராஜெக்ட் டைகர் திட்டத்தின் 50 ஆண்டுகள் நிறைவு நினைவுகூறும் வகையிலான நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியின் போது நாட்டின் புலிகளின் எண்ணிக்கை, மற்றும் புலி பாதுகாப்பு குறித்த பதிவுகளை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு முதுமலை, கூடலூர், மசினகுடி, பந்திப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏறத்தாழ 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிவிரைவு படையினர் உள்ளிட்டோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
இதையும் படிங்க : CSK Vs MI : எல் கிளாசிகோ ஆட்டத்தில் சென்னை மாஸ் வெற்றி - மும்பையை பந்தாடியது!