உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் தாக்குதல் மேற்கொண்டுள்ள நிலையில் அந்நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டுவருகிறது. ஆப்பரேஷன் கங்கா என்ற பெயரில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. உக்ரைன் நாட்டில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில், இதுவரை ஐந்து விமானங்கள் மூலம் 1,156 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உக்ரைன் நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டம் இன்று தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், விமானப் போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, அமைச்சர் ஹர்தீப் பூரி, கிரன் ரிஜ்ஜு, வி கே சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் மீட்பு நடவடிக்கையை விரைந்து முடிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், மீட்பு நடவடிக்கையை ஒருங்கிணைப்பதற்காக அமைச்சர் வி கே சிங் போலந்திற்கும், அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ரோமானியாவுக்கும், கிரண் ரிஜ்ஜு ஸ்லோவாக்கியாவுக்கும், ஹர்தீப் பூரி ஹங்கேரிக்கும் செல்வார்கள் எனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மீட்பு நடவடிக்கையில் ஏர் இந்தியா விமானத்துடன், இன்டிகோ மற்றும் ஸ்பைஸ் ஜெட் விமானங்களும் களமிறங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'ஜூனில் கரோனா நான்காம் அலை, ஆகஸ்டில் உச்சம்'