மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சியின் வாயிலாக மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 11 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றிவருகிறார். இந்நிலையில், ஏப்ரல் மாதத்திற்கான மனதின் குரல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், "கரோனா முதலாவது அலையை வெற்றிகரமாக சமாளித்த பிறகு, நாட்டின் மன உறுதி அதிகமாக இருந்தது. ஆனால் இரண்டாம் அலை நாட்டையே உலுக்கியுள்ளது. கரோனா இரண்டாம் அலையை சமாளிக்க மருத்துவர்கள், ஆக்ஸிஜன் உற்பத்தியாளர்கள் என பல்வேறு துறைகளை சார்ந்த வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன்.
சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள் கரோனாவுக்கு எதிராக கடுமையாக போராடுகின்றனர். கடந்த ஓராண்டில், அவர்கள் தொற்றுநோய் பற்றி பல வகையான அனுபவங்களை அனுபவித்திருக்கிறார்கள். இந்தப் போரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் பங்கு பெரும் அளவில் உள்ளது. இந்த நேரத்தில் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கரோனா தடுப்பூசி குறித்து வரும் வதந்திகளுக்கு மக்கள் இரையாக வேண்டாம். கரோனா பற்றிய தகவல்களை நம்பகமான ஆதாரங்கள் மூலமாக மட்டுமே பெறுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். கரோனா நிலைமையை சமாளிக்க மாநில அரசுகள் முன்னெடுக்கும் முயற்சிகளை மத்திய அரசு அர்ப்பணிப்புடன் காண்கிறது.
அனைத்து மாநில அரசுகளுக்கும் இலவசமாக தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களும் இதன் மூலம் பயனடையலாம். மே 1ம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நபருக்கும் தடுப்பூசி கிடைக்கும்" என்றார்.