டெல்லி: 'மனதின் குரல்' என்ற வாராந்திர வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இதன் 94ஆவது பதிப்பில் நேற்று (அக். 30) உரையாற்றினார்.
அப்போது, கோயம்புத்தூரின் ஆனைக்கட்டியில் இருக்கும் பழங்குடியினப் பெண்களின் டீ கப் தயாரிப்பு முயற்சியை வெகுவாக பாராட்டினார். இதுகுறித்து பிரதமர் பேசியதாவது, "கடந்த காலத்தை விட இன்று சூழலுக்கு உகந்த வாழ்கை மற்றும் சூழலுக்கு உகந்த பொருள்கள் பயன்பாடு குறித்து மக்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வு காணப்படுகிறது.
இப்படிப்பட்ட ஒரு முயற்சியை கோயம்புத்தூரில் இருந்து தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த அருமையான முயற்சி, ஆனைக்கட்டியில் இருக்கும் பழங்குடியினப் பெண்களின் ஒரு குழு செய்து வருகிறது. இந்த குழு சுடுமண் டீ கப்களை தயாரித்தும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
சுற்று சூழலுக்கு உகந்த சுடு மண்ணாலான 10,000 டீ கப்களை இந்தப் பெண்கள் உருவாக்கி உள்ளார்கள். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த மண்ணாலான டீ கப்களைத் தயாரிக்கும் பொறுப்பினை, இந்தப் பெண்கள் தாங்களே ஏற்படுத்திக் கொண்டார்கள்.
களிமண் கலவையில் தொடங்கி, வர்ணம் பூசுதல், இறுதிக்கட்ட பேக்கேஜிங் வரை அனைத்து வேலைகளையும் இவர்களே செய்கிறார்கள். இதற்காக இவர்கள் பயிற்சியும் பெற்றுள்ளனர். இந்த அற்புதமான முயற்சியை எத்தனை முறை பாராட்டினாலும் தகும் என தெரிவித்தார்.
கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டி அருகே உள்ள கொண்டனூர், பனப்பள்ளி மலை கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின பெண்கள் இந்த சுடு மண்ணாலான டீ கப்களை தயாரித்து வருகின்றனர். அதுமட்டுல்லாமல் களி மண்ணாலான டம்ளர், பிளேட், கையால் நெசவு செய்யப்பட்ட விரிப்புகள், மூலிகை தேன் வகைகள், ஜாம் வகைகளையும் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த தயாரிப்புகள் ‘தயா சேவா சதன்’ என்ற தொண்டு நிறுவனம் மூலம் உருவாகிறது. பழங்குடியின பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதையும் படிங்க: இந்தியாவில் தயாரிப்போம், உலகத்துக்காக தயாரிப்போம் - பிரதமர் மோடி