சிட்னி: பிரதமர் நரேந்திரமோடி மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக நேற்று(மே.23) ஆஸ்திரேலியா சென்றார். இன்று(மே.24) ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிசை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் இருநாட்டு வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், விரிவான கூட்டுப் பொருளாதார ஒப்பந்தத்தில் கவனம் செலுத்துவது குறித்தும் இருநாட்டு பிரதமர்களும் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் சிட்னியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பில், இருதரப்பு உறவுகள் குறித்தும், பிராந்திய வளர்ச்சிகள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்த சந்திப்பு தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி ட்வீட் செய்துள்ளார்.
அதில், ஆஸ்திரேலியாவின் லிபரல் கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான பீட்டர் டட்டன் உடன், பிரதமர் நரேந்திரமோடி பயனுள்ள சந்திப்பை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவின் வலுவான கட்சியின் ஆதரவிற்கு பிரதமர் மோடி பாராட்டுகளைத் தெரிவித்ததாகவும், இரு நாட்டுத் தலைவர்களும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான உறவுகள் குறித்தும், இருநாட்டின் வளர்ச்சி குறித்தும் விவாதித்தாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் லிபரல் கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஆஸ்திரேலியாவின் சிறந்த நண்பரான நரேந்திர மோடியை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான சிறப்பான உறவு குறித்தும், அது மேலும் வளர்ந்து வருவது குறித்தும் பெருமிதம் கொள்கிறேன். வரும் ஆண்டுகளில் இரு நாட்டு உறவுகளும் மேலும் பலம் பெற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவுக்கு முன்னதாக ஜப்பான் மற்றும் பப்புவா நியூ கினியா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் கடந்த 19ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதில், பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர், ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த 21ஆம் தேதி பப்புவா நியூ கினியா சென்றார். அங்கு நடைபெற்ற இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில், இந்திய - பசிபிக் தீவு நாடுகளிடையே வர்த்தகம் மற்றும் முதலீடு, சுகாதாரம், திறன் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும், காலநிலை மாற்றம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பசிபிக் தீவு நாடுகளுடன் இந்தியாவின் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், 12 படிநிலைகள் கொண்ட செயல்திட்டத்தை அறிவித்தார்.
இதையும் படிங்க: நாங்கள் நம்பியவர்கள் நெருக்கடியான சூழலில் உதவவில்லை - பிரதமர் மோடி வேதனை!