லக்னோ: உத்திரபிரதேசத்தில் உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். லக்னோவில் உள்ள விரிந்தவான் யோஜ்னாவில் 2023ஆம் அண்டுக்கான உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
தொடக்க விழாவில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, லக்னோ நகரம் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.
மூன்று நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், ஹர்தீப் பூரி, அஸ்வினி வைஷ்ணவ், உள்ளிட்ட மத்திய மற்றும் மாநில அரசு துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். மேலும் டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, மகேந்திரா அண்ட் மகேந்திரா தலைவர் ஆனந்த் மகேந்திரா, ஆதித்யா பிர்லா குழுமத் தலைவர் குமாரமங்கலம் பிர்லா உள்ளிட்ட தொழிலதிபர்கள் கலந்து கொள்கின்றனர்.
மேலும் பல்வேறு தொழில் துறை வல்லுநர்கள், தொழில்முனைவோர் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும், வேலை வாய்ப்புகளை வழங்கவும் பல்வேறு முதலீட்டாளர்களிடம் இருந்து பெரிய அளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் உத்தரபிரதேசம் மாநிலம் அடையும் வளர்ச்சியின் புதிய பாதையை உலகம் உற்று நோக்கும் என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் டன் கணக்கில் கொட்டிக் கிடக்கும் லித்தியம்!