ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையிலும் ’மனதின் குரல்’ நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இந்நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்திற்கான மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தொழில்நுட்ப உதவியுடன் நடைபெற்ற கலாசார நிகழ்ச்சிகள் நெருக்கடி காலத்தை எதிர்கொள்வதில் மிக பெரிய பங்காற்றியது என தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "கலாசாரம், நெருக்கடிகளைச் சமாளிப்பதில் பெரும்பங்காற்றுகிறது. தொழில்நுட்பம் வாயிலாகவும் கலாசாரம் ஒரு உணர்வுரீதியிலான புதுத்தெம்பைப் போல செயலாற்றுகிறது. இன்று நாடெங்கிலும் பல அருங்காட்சியகங்களும், நூலகங்களும் தங்களின் திரட்டுக்களை முழுவதுமாக டிஜிட்டல்மயமாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
டெல்லியில் நமது தேசிய அருங்காட்சியகம் இது தொடர்பாக பாராட்டத்தக்க முயல்வுகளை மேற்கொண்டிருக்கிறது. தேசிய அருங்காட்சியகம் வாயிலாக சுமார் 10 மெய்நிகர் காட்சிக்கூடங்களை அறிமுகப்படுத்தும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன. இப்போது நீங்கள் வீட்டில் அமர்ந்தபடியே டெல்லியின் தேசிய அருங்காட்சியகக் காட்சிக்கூடங்களைச் சுற்றிப் பார்க்க முடியும்.
ஒருபுறத்தில் கலாசார மரபுகளையும் அடையாளங்களையும் தொழில்நுட்பம் வாயிலாக பெருவாரியான மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது முக்கியம் எனும் அதே வேளையில், இந்த அடையாளங்களையும், மரபு சின்னங்களையும் பாதுகாக்க தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிக மகத்துவம் வாய்ந்தது.
அஜந்தா குகைகளின் மரபு சின்னங்கள் டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தப்படவுள்ளது. இதிலே அஜந்தா குகைகளின் முழுமையான மகோன்னதமும் காணக் கிடைக்கும். பெருந்தொற்று ஒரு புறத்தில் நாம் பணியாற்றும் வழிமுறைகளை மாற்றியமைத்திருந்தாலும், வேறொரு புறத்தில் இயற்கையை புதியதொரு கோணத்தில் அனுபவிக்கவும் ஒரு வாய்ப்பை அளித்திருக்கிறது.
கடந்த நவம்பர் 12ஆம் தேதி முதல், டாக்டர் சலீம் அலியின் 125ஆம் பிறந்த ஆண்டு தொடங்கியிருக்கிறது. சலீம், பறவைகள் உலகில் bird watching என்று அழைக்கப்படும் பறவைகள் கண்காணிப்பிற்காக அருஞ்செயல்களை ஆற்றியவர். உலகின் பறவைகள் கண்காணிப்பாளர்களை இந்தியாவை நோக்கி ஈர்த்தவர்.
நியூசிலாந்தில் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான கௌரவ் ஷர்மா, உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான சம்ஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றார். ஒரு இந்தியன் என்ற வகையில், இந்தியக் கலாசாரத்தின் இந்தப் பரப்புரை, நம்மனைவருக்கும் பெருமிதத்தை அளிக்கிறது.
நவம்பர் மாதம் 30ஆம் தேதியன்று ஸ்ரீ குருநானக் தேவின், 551ஆவது பிறந்த ஆண்டினை நாம் கொண்டாட இருக்கிறோம். உலகம் முழுவதிலும் குருநானக் தேவின் தாக்கம் தெள்ளத்தெளிவாகக் காணக் கிடைக்கிறது. வான்கூவர் முதல் வெல்லிங்டன் வரை, சிங்கப்பூர் முதல் தென்னாப்பிரிக்கா வரை அவருடைய செய்தி அனைத்து இடங்களிலும் எதிரொலிக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: வாரணாசியில் நடக்கும் தேவ் தீபாவளி நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார்!