டெல்லி: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் பேருந்து தீப்பிடித்ததில் பயணிகள் 11 பேர் உயிரிழந்தனர். 32 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், "மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நிகழ்ந்த கோரமான பேருந்து விபத்தால் மிகுந்த வருத்தமடைந்தேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் உள்ளூர் நிர்வாகம் செய்து வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 அளிக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனது ட்விர்ட்டர் பக்கத்தில், "நாசிக்கில் பேருந்துக்கு தீப்பிடித்து பலர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். இந்த விபத்தில் தங்கள் உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" என்று பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாசிக் அருகே தீப்பிடித்து எரிந்த பேருந்து ... 11 பேர் உயிரிழப்பு...