பாலகாட்: மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் பகுதியில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் பெண் பயிற்சி விமானி உள்பட இரண்டு பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநில கோண்டியா பகுதியில் உள்ள பிர்சி விமான தளத்தில் இருந்து மதியம் 2 மணி அளவில் பெண் பயிற்சி விமானி உள்பட இருவருடன் ஒரு பயிற்சி விமானம் புறப்பட்டு உள்ளது.
அண்டை மாநிலமான மத்திய பிரதேசத்திற்குள் நுழைந்த பயிற்சி விமானம் பாலகாட் பகுதியில் பறந்து கொண்டு இருந்தது. இந்நிலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பயிற்சி விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மலை பிரதேச பகுதியான பாக்குடோலா அருகே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பெண் பயிற்சி விமானி, உள்பட பயிற்சி விமானத்தில் பயணித்த இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், சம்பவ இடத்தில் கிடந்த ஆதாரங்களையும், உடல் கருகிய நிலையில் இருந்த விமானிகளின் சடலங்களும் மீட்கப்பட்டு உள்ளன.
இந்த விபத்தில் உயிரிழந்தது பெண் பயிற்சி விமானி ருகாஷான்கா, பயிற்சியாளர் மொகித் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. இந்த விபத்தை உறுதி செய்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரி கமலேஷ் மேஷ்ராம் உயிரிழந்தவர்கள் குறித்த தகவலை வெளியிட்டார்.
கடந்த மார்ச். 16 ஆம் தேதி அருணாசல பிரதேசத்தில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த இந்திய ராணுத்தின் சீட்டா வகை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. வன பகுதியில் உள்ள மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்த மேஜர் ஜெயந்த் உள்பட இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
அண்மையில், மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் இந்திய விமானப் படையின் சுகோய் சு-30 மற்றும் மிராஜ் 2000 ஆகிய இரண்டு போர் விமானங்கள் வழக்கமான பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது. இரண்டு போர் விமானங்களும் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் சுகோய் விமானத்தை இரண்டு விமானிகளும், மிராஜ் விமானத்தை ஒரு பைலட்டும் இயக்கி வந்தனர். அப்போது எதிர்பாராத வகையில் விபத்துக்குள்ளாகின. இதில் இந்த இரண்டு விமானங்களும் இந்திய விமானப் படையின் முன் வரிசைப் பாதுகாப்பில் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தின் சோர்ஹாட்டா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட உம்ரி கிராமத்தின் அருகே உள்ள வயல் வெளியில் பயிற்சி விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பயிற்சி விமானி சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதேநேரம் இந்த விபத்தில் தலைமை விமானி விமல் உயிரிழந்தார்.
இதையும் படிங்க: தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் - மகளிர் உரிமைத் தொகை குறித்த முக்கிய அறிவிப்பு?