புதுச்சேரியில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பிள்ளையார் குப்பம் கிராமம் உள்ளது. இங்குள்ள படுகை அணை 75 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது, படுகை அணையில் சில பகுதிகள் சிதைவடைந்துள்ளதால் கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவருகிறது.
இது குறித்து அரசுக்கு அவ்வப்போது சுற்றுப்பகுதி விவசாயிகள் தகவல் தெரிவித்தும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவில்லை.
அணையின் நடுவில் ஏற்பட்ட ஒரு சிறிய ஓட்டை இயற்கை பேரிடர் காலங்களில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு அணை உடையும் அபாயத்தில் உள்ளது. தற்போது மணல் மூட்டைகளை வைத்து சமாளிக்கும் பொதுப்பணித் துறையினர் இதற்கு நிரந்தரத் தீர்வு காணவில்லை.
நிவர் புயலின்போது பெய்த கனமழையால் அனைத்துப் படுகை அணைகளும் நிரம்பியுள்ளன. இந்த நிலையில் ஏற்கனவே சீரமைக்காமல் மணல் மூட்டையை வைத்து சமாளித்த பிள்ளையார்குப்பம் படுகை அணை உடையும் அபாய கட்டத்தில் இருக்கிறது.
அண்மையில் பெய்த மழையால் தேங்க வேண்டிய நீர் அனைத்தும் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டதாக கவலையுடன் இப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.