கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மற்றும் நேற்று (செப் 27) நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ அமைப்புகளுக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் தேசிய புலானாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்தல், ஆயுதப் பயிற்சிகளை அளிப்பதற்காக பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல் போன்ற குற்றச்சாட்டின் கீழ் தேசிய புலனாய்வு முகமை ஐந்து வழக்குகளின் கீழ் இந்த சோதனையை நடத்தியது.
தமிழ்நாடு 3, ஆந்திரபிரதேசம் (4), தெலங்கானா 1, புதுடெல்லி 19, கேரளா 11, கர்நாடகா 8, உத்தரபிரதேசம் 3, ராஜஸ்தான் 2, ஹைதராபாத் 5, அஸ்ஸாம், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, மேற்குவங்கம், பீகார் மற்றும் மணிப்பூர் ஆகிய 15 மாநிலங்களில் உள்ள 93 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர். இந்நிலையில் பிஎப்ஐ மற்றும் அதைச் சார்ந்த அமைப்புகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவில் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் கல்வி, சமூக-பொருளாதாரம் மற்றும் அரசியல் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
ஆனால் அவர்கள் ஒரு பயங்கரவாத செயலை பின்பற்றி வருகின்றனர். நாட்டின் அரசியலமைப்பு அதிகாரத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்துகின்றன. பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகள் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டுள்ளன. நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, பொது அமைதி ஆகியவற்றிற்கு எதிராக செயல்படுகின்றனர்.
மேலும் தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர்கள் இயக்கம் (SIMI) மற்றும் ஜாமாத்-உல்-முஜாஹிதீன் பங்களாதேஷ் (JMB) போன்ற அமைப்புகளுடன் பிஎப்ஐ உறுப்பினர்கள் சிலர் இணைந்துள்ளனர். எனவே அரசியலமைப்புச் சட்டம் 3ன் உட்பிரிவு 3ன் படியும் மற்றும் பிரிவு 4ன் படியும் இந்த தடை விதிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பிஎப்ஐ அமைப்பை தடை செய்ய வேண்டும்....ஹெச்.ராஜா வலியுறுத்தல்