பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடர், கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.
அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான காங்கிரஸ், மைசூர் பல்கலைக்கழக மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதைக் கண்டித்து தொடர்ந்து சட்டப்பேரவையில் விவாதத்தை எழுப்பி வருகிறது. கூட்டத்தொடரின் எட்டாவது நாளான நேற்று (செப். 22) கேள்வி நேரத்திற்குப் பிறகு, சபாநாயகர் பூஜ்ய நேரத்திற்கு அனுமதித்தார்.
காதில் கூறிய தலைவர்
இந்நிலையில், சட்டப்பேரவையில் மாணவிக்கு நடந்த அநீதி குறித்து எதிர்க்கட்சித் தலைவரும், அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா தீவிரமாகப் பேசி வந்தார்.
அப்போது, அவரின் வேட்டி நழுவியது கூட அறியாமல், சித்தராமையா தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். இதை அவரின் அருகில் அமர்ந்திருந்த அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே. சிவக்குமார் கவனித்துள்ளார்.
நீண்ட நேரமாகியும் சித்தராமையா வேட்டியை சரிசெய்யவில்லை. சிறிதுநேரம் பின்னர் தனது இருக்கையை விட்டு எழுந்த சிவக்குமார், அவரின் அருகே சென்று வேட்டி அவிழ்ந்ததை அவரின் காதில் மெதுவாக கூறியுள்ளார்.
பாஜகவுக்கு இதான் வேலை
இதையடுத்து, தனது இருக்கையில் அமர்ந்து வேட்டி அவிழ்ந்துவிட்டது என்று கூறி, அதை சரிசெய்தார். அப்போது பேரவையே சிரிப்பலையில் அதிர்ந்தது.
அப்போது சித்தராமையா அமைச்சர் ஈசுவரப்பாவிடம், 'கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிறகு, எனது உடல் எடை 5 கிலோ வரை அதிகரித்துவிட்டது. இதனால், சில சமயம் இவ்வாறு வேட்டி நழுவி விடுகிறது. அதை சரிசெய்த பிறகு மீண்டும் பேசுகிறேன்' எனக் கூறினார்.
அதன்பின்னர், சித்தராமையாவை நோக்கிப் பேசிய முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார்,"வேட்டி அவிழ்ந்தது கட்சி மானம் சம்பந்தப்பட்டது என்பதால்தான் நமது கட்சித்தலைவர் உங்கள் அருகே வந்து மெதுவாக கூறினார்.
ஆனால், நீங்கள் ஊருக்கே அறிவித்துவிட்டீர்களே. பாஜகவுக்கு நமது வேட்டியை கழற்றுவதுதான் வேலை" என்று கூற சட்டப்பேரவையில் சற்று நிமிடம் காரசார விவாதம் நடைபெற்றது.
மைசூர் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழு பேரை கர்நாடக தனிப்படை காவல் துறையினர் கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மைசூரு கூட்டு வன்புணர்வு வழக்கு: ஏழாவது குற்றவாளி கைது!