புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 30 தொகுதிகளில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட என்.ஆர் காங்கிரஸ் 10 இடங்கள், பாஜக 6 இடங்கள் என, மொத்தம் 16 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சி 2, திமுக 6 இடங்களில் வெற்றி பெற்றன. அதிமுக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது.
இதைத்தொடர்ந்து என்.ஆர் காங்கிரஸ் ரங்கசாமி தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த 7ஆம் தேதி ரங்கசாமி மட்டும் முதலமைச்சராகப் பதவியேற்றார். அதன் பின்னர், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், தற்போது சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்க வசதியாகப் பேரவைக் கூட்டத்தை நடத்தி, தற்காலிகத் தலைவரை (சபாநாயகர்) நியமிப்பது வழக்கம். இந்த நிலையில், என்.ஆர். காங்கிரஸ் சார்பில் ராஜ்பவன் தொகுதியில் வெற்றி பெற்ற லட்சுமி நாராயணனை தற்காலிக சபாநாயகராகத் தேர்வு செய்து, ஆளுநர் மாளிகையில் கடந்த 9ஆம் தேதி அக்கட்சி சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. பதவி ஏற்கும் தேதி இறுதியானதும், ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் அவருக்குப் பதவி பிரமாணம் செய்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேரவைக் கூட்டம் கூட்டப்பட்டதும், லட்சுமி நாராயணன் தற்காலிக சபாநாயகராக இருந்து தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்குப் பதவி பிரமாணம் செய்து வைப்பார். பாஜக தரப்பில் துணை சபாநாயகர் பதவி கோரப்பட்டுள்ளது. சபாநாயகர் தேர்தல் ஒரே நாளில் நடந்தால், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் சபாநாயகர் பதவிக்கும், துணை சபாநாயகர் பதவிக்கு பாஜகவும் மனு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிக்கு வேறு யாரும் போட்டியிட முன்வராதபட்சத்தில் சபாநாயகர், துணை சபாநாயகர் போட்டியின்றி ஒரு மனதாகத் தேர்வு செய்யப்படுவர். புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமியின் உடல்நிலை சீராக வருவதால், ஓரிரு நாட்களில் புதுச்சேரிக்குத் திரும்புவார் என, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜெயபால் தெரிவித்துள்ளார்.