ஹைதராபாத்: சர்வதேச அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில், சீனாவை பின்னுக்குத்தள்ளி இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை மிகச்சிறிய மாநிலம், சிக்கிம். அங்கு ஒட்டுமொத்த மக்கள் தொகை 6.9 லட்சம் தான். ஆனால், உலகளவில் சிக்கிம் மாநிலத்தை விட குறைந்தளவு மக்கள் தொகை கொண்ட நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன.
வாடிகன்: உலகின் மிகச்சிறிய நாடாக அறியப்படுவது, வாடிகன் சிட்டி. இந்நாட்டின் ஒட்டுமொத்த பரப்பளவே ஒரு சதுர கிலோ மீட்டர் தான். குடிமக்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வெறும் 518 பேர். இங்கிருக்கும் கத்தோலிக்க தேவாலயம் உலகளவில் பிரபலம். சிஸ்டைன் சேப்பல் (Sistine Chapel), செயின்ட் பீட்டர்ஸ் பேசிலிகா (St.Peter's Basilica), செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கம் (St.Peter's Square) ஆகிய தேவாலயங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.
டுவாலு: ஹவாய் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே இருக்கும் தீவு நாடு, டுவாலு. 26 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்நாட்டின் மக்கள் தொகை 11,396. கடல் மட்டம் உயர்வால் எப்போது வேண்டுமானாலும் நீரில் மூழ்கக்கூடிய அபாயகட்டத்தில் உள்ளது. படகு தயாரிப்பு இங்கு வசிக்கும் மக்களின் பிரதானத் தொழில். தேங்காய் மூலம் செய்யப்படும் உணவுகள் இங்கு பிரசித்தம்.
நயுரு: வடகிழக்கு ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள தீவு நாடு, நயரு. இந்நாட்டின் மக்கள் தொகை 12,780. 21 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த நாட்டின் பிரதான தொழில் விவசாயம். அன்னாசி, வாழை, தென்னை பயிரிடப்படுகிறது.
பலாயு: மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் அமைந்திருக்கும் நாடு, பலாயு. 459 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த நாட்டில் 18,058 பேர் வசித்து வருகின்றனர். 1914-1944 வரை ஜப்பான் அதிகாரத்தின் கீழ் இருந்தது. 1994ம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. அழகான தீவுகளுக்கும், இயற்கை அழகுக்கும் பெயர் பெற்றது.
சான் மரினோ: இத்தாலி அருகே அமைந்துள்ள சான் மரினோ நாட்டின் மக்கள் தொகை 33,642 ஆகும். 1862ம் ஆண்டு தன்னாட்சி கொண்ட நாடாக அறிவிக்கப்பட்டது. முதலாம் உலகப்போரின்போது, பல்வேறு பாதிப்புகளை சந்தித்த இந்த நாடு, அதன்பின் மறுவடிவம் பெற்றது. மவுண்ட் டிடானோ நகரில் உள்ள குவைடா துறைமுகம் பிரசித்தி பெற்றது.
மொனாகோ: மேற்கு ஐரோப்பாவில் இருக்கும் மொனாகோ நாட்டில் 36,000 பேர் வசிக்கின்றனர். எனினும் பல்வேறு வசதிகளுடன் மக்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 32 சதவீதம் பேர் லட்சாதிபதிகள்.
லிச்டென்ஸ்டெயின்: சுவிட்சர்லாந்து - ஆஸ்திரியா நாடுகளுக்கு இடையே அமைந்திருக்கும் நாடு, லிச்டென்ஸ்டெயின். 40,000 பேர் மட்டுமே வசிக்கும் இந்நாட்டின் ஒட்டுமொத்த பரப்பளவு 160 சதுர கிலோ மீட்டர். ஐரோப்பிய கண்டத்தில் அமைந்துள்ள மிகச்சிறிய நாடு இதுவாகும்.
செயின்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ்: வெனிசுலாவின் வடக்கே அமைந்துள்ள சிறிய கரீபியன் நாடு, செயின்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ். 261 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்நாட்டின் மக்கள் தொகை 48,000 பேர்.
டொமினிகா: கரீபியன் தீவு நாடுகளில் ஒன்று, டொமினிகா. 751 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்நாட்டில் 73,000 பேர் வசிக்கின்றனர். இங்கு ஏராளமான எரிமலைகள் இருப்பதுடன், அடர்காடுகளும் உள்ளன.
இதையும் படிங்க: 8 வயது சிறுவன் கழுத்து நெரித்துக் கொலை: நரபலியா? திடுக்கிடும் பின்னணி!