பாட்னா: பிகார் தலைநகர் பாட்னாவில் பாஜக மூத்தத் தலைவரும், மாநிலத்தின் துணை முதல் அமைச்சருமான சுஷில் குமார் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார்? ஐக்கிய ஜனதா தளம், நிதிஷ் குமாரின் எதிர்காலம் என்ன? என்று கேள்வியெழுப்பினார்கள்.
இதற்கு பதிலளித்த சுஷில் குமார் மோடி, “எந்தக் குழப்பமும் வேண்டாம், நிதிஷ் குமார்தான் பிகாரின் முதலமைச்சர். இந்த முடிவு தேர்தலுக்கு முன்னரே எடுக்கப்பட்டது. அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. கூட்டணி கட்சிக்குள் ஒருவர் அதிக இடங்களை பிடிப்பதும், மற்றொருவர் குறைவதும் சகஜம். ஆனால் கூட்டணி அதற்கு அப்பாற்பட்டது.
மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்துள்ளனர். எங்கள் கூட்டணி தொடரும்” என்றார். இதையடுத்து லோக் ஜனசக்தி கட்சியின் சிராக் பஸ்வான் குறித்த கேள்விக்கு, “அவர் எங்களது கூட்டணியில் இல்லை. அதை பற்றி நான் பேச தேவையில்லை” என்றார்.
சிராக் பஸ்வானின் மத்திய அரசின் ஆதரவு நிலைப்பாடு குறித்த கேள்விக்கு, “அது எனக்கு தெரியாது. நான் மாநில அரசியலில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். மத்திய அரசின் அதிகாரப்பூர்வ நிர்வாகிகள் இது தொடர்பாக பதிலளிப்பார்கள். ஒன்றை நான் தெளிவுப்படுத்துகிறேன், அவர் பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லை” என்றார்.
இதையடுத்து பேசிய பாஜக மாநிலத் தலைவர் காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக் விஜய் சிங்குக்கு கண்டனம் தெரிவித்தார். பிகார் மாநிலத்திலிருந்து விலகி, தேசிய அரசியலில் நிதிஷ் குமார் கவனம் செலுத்த போகிறார் என்று திக் விஜய் சிங் கூறியுள்ளார். மத்தியப் பிரதேச இடைத்தேர்தலில் அவரது கட்சி (காங்கிரஸ்) படுதோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் அவர் நிதிஷ் குமார் பற்றி கூறியுள்ளார்.
அவரை யாரென்று கூட பிகார் மக்களுக்கு தெரியாது” என்றார். 234 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட பிகாரில் பாஜக 74 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், குழப்பமில்லை, நிதிஷ் குமார்தான் பிகாரில் ஆட்சி செலுத்துவார் என்று சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “நிதிஷ் குமாரை மக்கள் விரும்புகின்றனர்”- ஜேடியூ தலைவர் வசிஷ்டா சிங்