தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இந்தியாவில் கடந்த வாரத்தில் 30 பேருக்கு மட்டுமே உறுதிசெய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வாரத்தில் 236 பேருக்கு உறுதியாகி உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று அதிகமாகப் பரவியுள்ளது.
இந்நிலையில் வேகமாகப் பரவிவரும் ஒமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக உத்தரப் பிரதேசத்தில் நாளைமுதல் (டிசம்பர் 25) இரவு நேர ஊரடங்கை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் எனவும், திருமண விழாக்களில் 200 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மத்திய அரசு அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கு அறிவுறுத்தல் ஒன்றை விடுத்திருந்தது. அதில், ஒமைக்ரான் தொற்று கரோனாவை விட மும்மடங்கு வேகமாகப் பரவி வரும் நிலையில் மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு விதிப்பு, கட்டுப்பாடுகளை கடுமையாக்குதல் உள்ளிட்டவற்றை விதிக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டிலும் கரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம், இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படலாம் எனக் கூறப்படும் நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று உயர் அலுவலர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
முன்னதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம், ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருவதைச் சுட்டிக்காட்டி கரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை கேட்டுக்கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துங்கள்; மத்திய அரசு