புதுச்சேரி: மாநிலம் காரைக்காலில் பாஜகவினருக்கு இரண்டு நாட்களாக பயிற்சி முகாம்கள் நடைபெற்றது. இதில் காரைக்காலில் உள்ள ஐந்து தொகுதிகளுக்கு நடைபெற்ற பயிற்சி முகாம்களில் பாஜகவினர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். அதனையடுத்து நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், "வேல் யாத்திரை குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கொச்சைப்படுத்தி பேசிவருவது கண்டனத்துக்குரியது. திமுக தலைவர் ஸ்டாலினின் பினாமி போல் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செயல்பட்டு வருகிறார். மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா 2000 ரூபாய் பணமும், அரிசியும் உடனடியாக வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நாளை காலை புதுச்சேரி சட்டமன்றத்தை பாஜக மகளிர் பிரிவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகிற புதன்கிழமை காரைக்காலில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்” என்றார்.