மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பத்ரா சால் குடியிருப்பு சீரமைப்பு பணிகளில் ரூ. 1,000 கோடி அளவில் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த வழக்கை அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்தது. அப்போது சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் எம்பியுமான சஞ்சய் ராவத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் ஆகஸ்ட் 1ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதன்பின் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே ராவத் ஜாமீன் கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இருப்பினும் பல்வேறு காரணங்களால் ஜாமீன் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அந்த வகையில், 100 நாட்களுக்கும் மேலாக ராவத் சிறையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று (நவம்பர் 9) அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து சிறையிலிருந்து வெளியான ராவத் கூறுகையில், "சாவர்க்கர், பால கங்காதர திலகர் போன்று நானும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டேன். எனது குடும்பம் பல்வேறு துன்பங்களை சந்தித்தது. நிறைய இழந்துவிட்டது. இந்த கைது வாழ்க்கையிலும் அரசியலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இதுபோன்ற 'பழிவாங்கும் அரசியல்' நாட்டில் எங்கும் கண்டிராதது. கடந்த காலங்களில் அரசியல் நகர்வுகளில் எதிரிகள் கூட நல்ல முறையில் நடத்தப்பட்டனர் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'இந்து' என்ற சொல் குறித்த சர்ச்சை கருத்தை திரும்பப்பெற்றார் சதீஷ் ஜார்கிஹோலி