புதுச்சேரி: மாநில திமுக அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமாரின் மகன் ஆனந்தராஜ் - மீனாட்சி ஆகியோரின் சுயமரியாதை திருமணத்தை திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோர் இணைந்து நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்கள்.
இதைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "தமிழ்நாட்டையும் புதுச்சேரியையும் என்றும் பிரித்து பார்க்க முடியாது. அதனால் தான் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட்ட 40 தொகுதிகளும் வெல்ல வேண்டும் என்று கூறுகிறோம். கலைஞரைப் போலவே எனக்கும் புதுச்சேரியின் மீது அதிகப் பாசம் உண்டு.
தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட திராவிட மாடல் ஆட்சியை இந்த மாநிலத்தில் எதிர்பார்ப்பது நியாயம் தான். தற்போது புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறுவதாகத் தெரியவில்லை. இங்கிருக்கும் முதலமைச்சர் உயர்ந்த மனிதர் தான், உயரத்தில் மட்டும். ஆனால் அடிபணிந்தே கிடக்கிறார்.
அவரை குற்றம் சொல்ல விரும்பவில்லை. அவர் நல்லவர் தான், ஆனால் நல்லவர் வல்லவராகவும் இருக்க வேண்டும். இங்கிருக்கும் ஆட்சி துணைநிலை ஆளுநர் கட்டுப்பாட்டில் நடக்கிறது. இது இந்த புதுவை மாநிலத்திற்கு இழுக்கு. நிச்சயமாக புதுவை மாநிலத்தில் திமுகவுடைய ஆட்சி மீண்டும் உதயமாகும்.
இந்த மாநிலத்தில் யார் ஆட்சி நடத்தினாலும் மதவாத ஆட்சி நடைபெறக் கூடாது. விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற கொள்கையோடு பணியாற்ற வேண்டும்” எனப் பேசினார்.
இதையும் படிங்க: குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்றார்