ஹைதராபாத் (தெலங்கானா): கனமழை காரணமாக சாலையில் சென்ற நபர் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
நீரில் தொலைந்த நபர் தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர் ரஜினிகாந்த் என்பது தெரியவந்தது. மணிகொண்டா பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடையில் இவர் தவறி விழுந்தார். சனிக்கிழமை (செப்., 25) பெய்த கனமழையால் சாலைகளில் நீர் குளத்தைப் போல தேங்கிக் கிடந்தது. சில இடங்களில் ஆறு போல நீரோட்டம் அதிகமாக இருந்தது.
இச்சூழலில், தன் வீட்டில் இருந்து சாலைக்கு வந்த ரஜினிகாந்த், சாலையில் நடந்து சென்றுள்ளார். அவர் வீட்டில் இருந்து 50 மீட்டர் தொலைவில் சென்றபோது, கழிவுநீர் கால்வாய் குழியில் தெரியாமல் கால் வைத்துள்ளார்.
நீரோட்டம் அதிகமாக இருந்ததால், அவர் கழிவுநீர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டார். அவரைத் தேடும் பணியில், பேரிடர் மீட்பு குழுவினரும், தீயணைப்புத் துறையினரும், காவல் துறையினரும் ஈடுபட்டுவந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக காணொலி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியிருந்தது. அதில், நீர் சூழ்ந்துள்ள சாலையைக் கடக்கும் ரஜினிகாந்த், அங்கு கழிவுநீர் கால்வாய் இருப்பது தெரியாமல், தனது அடுத்த அடியை எடுத்து வைக்கிறார். எதிர்பாராவிதமாக அதே நீரோட்டத்தில் அவர் அடித்துச் செல்லப்படுகிறார்.
பல இடங்களில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அவரது உடல் 2.5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நேக்னாம்பூர் ஏரியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவரது உடலை காவல் துறையினர் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: ஹைதராபாத் கனமழை - கழிவுநீர் கால்வாயில் கால் வைத்தவர் மாயம்!