பெகுசராய்: பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டம் சாஹேப்பூர் கமல் பகுதியை சேர்ந்த சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், பஞ்ச்வீர் பகுதியை சேர்ந்த இரண்டு சிறுமிகள் அங்குள்ள நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி வளாகத்தில் சிறுமிகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மதுபோதையில் வந்த சோட்டி மஹாட்டோ என்பவர் சிறுமிகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
இதனால் அச்சம் அடைந்த சிறுமிகள் இருவரும், அங்கிருந்து தப்ப முயன்றனர். மதுபோதையில் இருந்த மஹாட்டோ விடாமல் துரத்தியுள்ளார். பின்னர் சிறுமிகள் இருவரும் பள்ளி வளாகத்தில் இருந்த கழிவறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டனர். அப்போது கழிவறையின் மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கியுள்ளார் மஹாட்டோ. இந்நிலையில் சிறுமி ஒருவரை அவர் பாலியல் வன்கொடுமை செய்தார். மற்றொரு சிறுமியை தாக்கி அவரையும் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். எனினும் அந்த சிறுமி மஹாட்டோவின் பிடியில் இருந்து தப்பினார்.
இதற்கிடையே, சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டனர். பொதுமக்கள் வருவதை அறிந்த மஹாட்டோ அங்கிருந்து தப்பியோடினார். இதற்கிடையே, படுகாயம் அடைந்த சிறுமிகளை மாவட்ட அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், மஹாட்டோவை கைது செய்தனர். பள்ளி வளாகத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பஞ்ச்வீர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் பாலின சமத்துவம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும், பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் வருகின்றன. இதில் பள்ளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக 2012ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது தான் போக்சோ சட்டம். பொதுவாக குழந்தைகள் மீதான அனைத்து குற்றத்துக்கும் இச்சட்டம் பொருந்தாது. குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்கள் மீது தான் இச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். இச்சட்டம் ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் இருபாலருக்கும் பொருந்தும். போக்சோ சட்டத்தை பொறுத்தவரை பல்வேறு பிரிவுகள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறையும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
இதையும் படிங்க:டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்த இந்தியா - ஆஸி., பிரதமர்கள்