மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் சித்தார்த் நகரை சேர்ந்தவர் ஸ்வேதா விஜய் ரன்வாடே (26). இவருக்கும் ராஜ்குருநகரை சேர்ந்த பிரதீக் கிசான் தாமலே என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இந்த திருமணம் உடனே நடக்க வேண்டும் என்று பிரதீக் தெரிவித்துள்ளார். ஆனால், ஸ்வேதா காலஅவகாசம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் ஸ்வேதா திருமணம் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். அதன்பின் பிரதீக் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். இதனிடையே தற்கொலை செய்துகொள்வதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். இருப்பினும் ஸ்வேதா மறுப்பு தெரிவித்துவந்தார். இந்த நிலையில் நேற்று (நவம்பர் 9) மதியம் ஒரு மணியளவில், ஸ்வேதா தனது தாய் திபாலியுடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பினார்.
அப்போது வாகன நிறுத்துமிடத்தில் முன்கூட்டியே காத்திருந்த பிரதீக் ஸ்வேதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பின் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்வேதாவின் கழுத்து, மார்பு மற்றும் வயிற்றில் சரமாரியாக குத்தினார். அதன்பின் அங்கிருந்து தப்பி ஓடினார். இதையடுத்து ஸ்வேதா குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஸ்வேதாவை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஸ்வேதா குடும்பத்தார் கூறுகையில், ஸ்வேதா சிஏ படிப்பை முடித்துவிட்டு, மேல் படிப்புக்காக வெளிநாடு செல்ல விரும்பினார். இதற்கு தடையாக இருந்த திருமணத்தை வெறுத்தார். இந்த மறுப்பால் தொல்லை கொடுத்துவந்த பிரதீக் மீதும் போலீசாரிடம் புகார் அளித்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்போது கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு காவல்துறை அதிகாரிகளின் அலட்சியப்போக்கே காரணம். முன்கூட்டியே பிரதீக் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் ஸ்வேதா உயிருடன் இருந்திருப்பார் என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பிகாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை