டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7அன்று தொடங்கி, வருகிற டிசம்பர் 29 வரை நடைபெறுகிறது. இதன் இன்றைய கூட்டத்தில் கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி., “புயல் மற்றும் இதர இயற்கைப் பேரிடர் காலங்களில் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அந்த மக்களின் நலன் காக்க, நவீன தொலைத்தொடர்பு தொழில் நுட்பங்களுடன் கூடிய போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை.
புயல் ஏற்படும் நேரங்களில் மற்ற மாநிலங்களில் உள்ள கடலோரப் பகுதிகளை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டு கடலோரப் பகுதிகள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமலும், நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாததாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, என்னுடைய கன்னியாகுமரி தொகுதியில் முழுநேரமும் தயார் நிலையில் இருக்கும் வண்ணம் ஹெலிபேட் வசதியுடன் கூடிய கடலோர காவல் நிலையம், ஆம்புலன்ஸ் வசதி மற்றும் விரைவு மீட்புப் படகுகள் உள்பட பல்வேறு பாதுகாப்பு வசதிகளை செய்து தர வேண்டும். மேலும் கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும்.
இவ்வாறான வசதிகள் இல்லையெனில், பேரிடர் காலங்களில் கடலோரப் பகுதிகளை பாதுகாக்க முடியாது. எனவே இயற்கைப் பேரிடர் காலங்களில் கடலோரப் பகுதிகளில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: எரிசக்தி சேமிப்பு திருத்த மசோதா மீது எம்.பி. வில்சன் வைத்துள்ள பரிந்துரைகள்!