இன்று (ஜூன்.18) காலை மத்தியப் பிரதேசத்தின் மோதிஜீல் மின் நிலையத்திற்கு சென்ற எரிசக்தி அமைச்சர் பிரதியுமான் சிங் தோமர், அங்கு திடீர் ஆய்வினை மேற்கொண்டார்.
குவிந்த புகார்கள்
அப்பகுதியில் நாள்தோறும் மின்வெட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து அமைச்சர் பிரதியுமான் சிங் தோமருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்த நிலையில், இது குறித்து அமைச்சர் நேரடியாக சென்று விசாரிக்க முடிவு செய்தார்.
அமைச்சரின் அதிரடி செயல்
அதன்படி, அமைச்சர் அங்கு சென்று திடீர் ஆய்வு செய்தபோது, ஒரு மின்மாற்றிக்கு மிக அருகில் தாவரங்கள் அதிகம் வளர்ந்து இருந்ததையும், அங்கு பறவைக் கூடு ஒன்று இருந்ததையும் அவர் கவனித்தார். உடனே, ஏணி ஒன்றை ஏற்பாடு செய்து, அனைத்து ஊழியர்களின் முன்னிலையிலும் மின்மாற்றியின் மேல் ஏறி அவரே அதனை சுத்தம் செய்தார்.
அலுவலர்களுக்கு எச்சரிக்கை
மேலும், தலைமை அலுவலகமே இவ்வாறு முறையான பராமரிப்பு இன்றி இருப்பது குறித்து அலுவலர்களிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அவர், இனி இதே போல் மாநிலத்தின் எந்த ஒரு மின் அலுவலகத்திலும், எந்த நேரம் வேண்டுமானாலும் இது போல் ஆய்வு நடத்தப்படும் என்றும், சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துத் திரும்பினார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், இதே போல் குவாலியரைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ, பெண் ஊழியர் ஒருவரின் புகாரை அடுத்து கமிஷனர் அலுவலகத்தின் அசுத்தமான கழிப்பறைகளை ஆய்வு செய்து, அதனை அவரே சுத்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஏழாவது சர்வதேச யோகா தினம்: சிறப்பு முத்திரை வெளியீடு!