ஹைதராபாத்: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தொலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதே நாளில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்டமாக 20 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்தது.
இதைத் தொடர்ந்து இன்று (நவ.17) ஆம் தேதி சத்தீஸ்கரில் இரண்டாம் கட்டமாக 70 தொகுதிகளுக்கும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், இரு மாநிலங்களிலும் ஒரு சில இடங்களில் சிறுசிறு வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின.
குறிப்பாக சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் ஐடிபிபி இந்தோ திபேதியன் எல்லை காவலர் ஒருவர் உயிரிழந்தது வாக்குப்பதிவின் போது பதற்றத்தை ஏற்படுத்தியது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களின் துரித நடவடிக்கைகளால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நக்சலைட்டுகளின் தாக்குதலில் உயிரிழந்தவர் தலைமைக் காவலரான ஜோகிந்தர் சிங் என்று தெரிய வந்துள்ளது.
பரபரப்புக்கு இடையே மத்தியப் பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரையில், மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 74 சதவீத வாக்குகளும், சத்தீஸ்கர் மாநிலத்தில் 70 தொகுதிகளில் நடந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 70.60 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் சார்பில் அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் பதான் தொகுதியிலும், டி.எஸ்.சிங்டியோ அம்பிகாபூர் தொகுதியிலும், அமைச்சர்கள் அமர்ஜித் பகத் சிடாபூர் தொகுதியிலும், உமேஷ் படேல் கர்சியா தொகுதியிலும், ஜெய்சிங் அகர்வால் கொர்பா தொகுதியிலும் களத்தில் உள்ளன.
இதுபோன்று பாஜக சார்பில், மாநிலத் தலைவர் அருண் சாவ் லோர்மி தொகுதியிலும், மாநிலத் துணைத் தலைவர் லக்ஹன்லால் தேவாங்கன் கொர்பா தொகுதியிலும், விஜய் பாகல் பதான் தொகுதியிலும், பிரிஜ் மோகன் அகர்வால் ராய்பூர் நகரம் மேற்கு தொகுதியிலும், ரேணுகா சிங் பாரத்பூர் சோன்ஹட் தொகுதியிலும், நாராயன் சந்தல் ஜாஞ்ச்கிர் சம்பா தொகுதியிலும் களத்தில் உள்ளனர். இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இதையும் படிங்க: நாளை சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடர்.. 10 மசோதாக்களை மாற்றமின்றி நிறைவேற்ற முடிவு.. அரசின் திட்டம் என்ன?