ஹைதராபாத்: ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டுகிறார்கள். பெண் குழந்தைகள் என்று வரும்போது, அவர்களின் தேவை மேலும் அதிகரிக்கிறது. ஒரு தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் என்றால், அவர்கள் குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்கு தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க மாதம் ஒன்றுக்கு ரூ.10,000 வரை முதலீடு செய்ய விரும்பினால், என்னென்ன சிறந்த வழிகள் உள்ளன என்பதை அவர்கள் அறிந்துகொள்வது அவசியம்.
பெற்றோர்கள் தங்களின் பெண் குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை வழங்குவதற்கு எதிர்கால நிதி தேவைகளுக்கு போதுமான பாதுகாப்பை வழங்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். பெற்றோரின் ஆண்டு வருமானத்தில் குறைந்தது 10 மடங்கு தொகை கிடைக்கும் வகையில் டேர்ம் இன்ஷூரன்ஸ் செய்து கொள்வது அவசியம். அதாவது ஆண்டுக்கு 5 லட்சம் சம்பளம் பெறும் ஒருவர், திடீரென இறக்க நேரிட்டாலோ , வருவாய் இழந்தாலோ குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் கிடைக்கும் வகையில் பாலிசியை தேர்ந்தெடுத்து காப்பீடு செய்ய வேண்டும்.
மேலும் பெண் குழந்தைகளுக்காக சிறப்பான திட்டமான சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana - SSY) என்னும் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் ரூ.3 ஆயிரம் வரை முதலீடு செய்யுங்கள். பெண் குழந்தைகளுக்காக சேமிப்பதற்கு இந்தத் திட்டம் ஒரு சிறந்த திட்டம் ஆகும். மீதமுள்ள ரூ.7 ஆயிரம் ரூபாயை பலதரப்பட்ட ஈக்விட்டி ஃபண்டுகளில் அடுக்கு முதலீட்டு உத்தியில் முதலீடு செய்யுங்கள்.
மேலும் உங்களால் முடியும் போதெல்லாம் இந்த முதலீட்டுத் தொகையை நீங்கள் அதிகரிக்கவும் செய்யலாம். நீங்கள் 15 ஆண்டுகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் முதலீடு செய்து வந்தால், சராசரியாக உங்களது முதலீட்டுத் தொகை 12 சதவீதம் வட்டியுடன் முதிர்ச்சி அடைந்து ரூ.44,73,565ஆக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிலர் குறைந்தபட்சம் எட்டு ஆண்டுகளுக்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதம் ரூ.25 ஆயிரம் வரை முதலீடு செய்ய விரும்புவார்கள். இவர்களுக்கு சில பாலிசிகளில் நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அவர்கள் அதிக வருமானத்தை எதிர்பார்க்கும் போது, அதில் சில ஆபத்து உள்ளது என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது.
குறைந்தபட்சம் 30-40 சதவீத முதலீட்டை நடுத்தர மற்றும் சிறிய கேப் ஃபண்டுகளுக்கு ஒதுக்குங்கள். மீதமுள்ள தொகையை பன்முகப்படுத்தப்பட்ட ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு மாற்றவும். நல்ல லாபம் தரும் நல்ல செயல்திறன் கொண்ட ஃபண்டுகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்கள். வருடத்திற்கு ஒருமுறை உங்கள் முதலீடுகளை மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
69 வயதான ஒருவர் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க முடியுமா? என்றால் முடியுமே. ஒருவர் அவரது நிதி சம்பந்தமான அனைத்து கடமைகளையும் முடித்து ஓய்வூதியமும் பெற்று வரும் பட்சத்தில் அவருக்கு பாலிசிக்கான தேவை அதிகம் இருக்காது. மேலும் அவர் பாலிசியை எடுப்பது என்பது அவரது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது.
69 வயதில், நீங்கள் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறீர்கள் என்றால் அந்த பாலிசிக்கான பிரீமியம் அதிகமாக இருக்கும். அதனால் நீங்கள் இரண்டு இன்ஷூரன்ஸ் நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு உங்கள் தேவைக்கேற்ப பாலிசியை ஒப்பிட்டு பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: Home loan: வீட்டுக்கடன் வாங்கும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்!