பெகுசராய் : பீகாரில் பி.ஏ. தேர்வு எழுதும் மாணவர்களின் ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி மற்றும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோரின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் கணேஷ் தத் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகம் மூலம் மாணவ மாணவியருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு உள்ளது.
ஹால் டிக்கெட்டில் மாணவ மாணவியரின் புகைப்படங்களுக்கு பதிலாக பிரதமர் மோடி, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோரின் புகைப்படங்கள் இருந்து உள்ளன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டு உள்ளனர்.
இதையடுத்து, புகைப்படங்கள் தவறுதலாக பதிவாகி இருப்பதாக தெரிவித்த அதிகாரிகள், பிரதமர் மோடி மட்டும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் புகைப்படங்கள் வந்த மாணவ மாணவியர்களுக்கு விரைந்த புது ஹால் டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
தேர்வு எழுத மூன்று அல்லது நான்கு நாட்களே இருந்த நிலையில், ஹால் டிக்கெட்டில் தங்களது புகைப்படத்திற்கு பதிலாக வேறு புகைப்படங்கள் இருந்ததை கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அந்த கல்லூரியில் நிர்வாக சிக்கல்கள் காரணமாக 2019 - 2022 கல்வி ஆண்டில் படித்த மாணவ மாணவியர்களுக்கே இன்னும் ரிசல்ட் அறிவிக்கப்படாமல் இருப்பதாக மற்ற மாணவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
ஹால் டிக்கெட்டில் புகைப்படம் மாறுவது புதிதல்ல என்றும் கடந்த ஆண்டும் இதேபோல் லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகம் வெளியிட்ட ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பீகார் ஆளுநர் பாகு சவுகான் ஆகியோரிடன் படங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஹால் டிக்கெட்டில் மாணவர்களின் புகைப்படத்திற்கு பதிலாக அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள் மாறிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணியிடம் சில்மிஷம்... மகளிர் ஆணையம் கடும் கண்டனம்!